புதுச்சேரியில் இறுதிப்பருவத் தேர்வுகள் இன்று தொடங்கியதை அடுத்து, மத்திய பல்கலைக்கழகம் அனுமதியால் புத்தகத்தைப் பார்த்து முதல்முறையாகத் தேர்வினை மாணவ, மாணவிகள் எழுதினர்.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 95-க்கும் மேற்பட்ட இணைப்புக் கல்லூரிகளில் படிக்கும் இறுதியாண்டு மாணவ, மாணவிகளுக்கு இன்று (செப். 21) செமஸ்டர் தேர்வு தொடங்கியது.
அதே நேரத்தில் கரோனா அச்சத்தால் மாணவர்களிடம் உள்ள குறிப்புப் பொருட்களை யாரும் பரிமாறாமல் இருப்பதைக் கண்காணிப்பாளர்கள் உறுதி செய்யும் பணியில் ஈடுபட்டனர். அதேபோல் வீடுகளிலும் கணினி மையங்களிலும் தேர்வு எழுதியோர் புத்தகம், குறிப்பேடுடன் தேர்வுகளை எழுதினர்.
மாணவர்கள் ஆன்லைனில் தேர்வை ஏ4 வெள்ளைத் தாளில் கருப்பு மை கொண்டு எழுதினர். பிறகு அத்தாள்களை ஸ்கேன் செய்து தேர்வு முடிந்து 30 நிமிடங்களுக்குள் அனைத்து பக்கங்களையும் பிடிஎஃப் கோப்பாக மாற்றி கல்லூரிகளுக்கு இணையத்தில் அனுப்ப உள்ளதாகத் தெரிவித்தனர்.