திருப்பூர்;'அனைத்து வகை பள்ளிகளிலும் நாளை முதல், ஐந்து நாட்களுக்கு
ஆன்லைன் வகுப்பு கிடையாது; மீறி நடத்தினால் நடவடிக்கை பாயும்' என மாவட்ட
முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.ஊரடங்கிலும் அரசு மற்றும்
தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையவழி வகுப்பு நடைபெற்று வருகின்றன. இதனால்,
மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தின் தாக்கத்தை குறைக்கும் விதமாக,
செப்., 21 முதல், 25 வரை அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள்
நடத்தாமல், விடுமுறை வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான
அரசாணை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதல்வர்களுக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது.இருப்பினும் சில தனியார் பள்ளிகள் செப்., 21 - 25ம்
தேதிகளில், மேற்கொள்ளப்படும் 'ஆன்லைன்' வகுப்பு குறித்த அட்டவணையை
மாணவர்களுக்கு அனுப்பி, பங்கேற்கும் படி வலியுறுத்தி வருகின்றன.
மாவட்ட
முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் கூறுகையில், ''தமிழக அரசின் உத்தரவின்படி, 21
முதல், 25ம் தேதி வரை எந்த இணையவழி வகுப்பு களும் நடத்தக்கூடாது. மாணவர்களை
நேரடியாக பள்ளிகளுக்கு வரச்சொல்லவும் கூடாது. விதிமீறும் பள்ளிகள் மீது
உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.