யோகாவில் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருக்கும் 123 வயது யோகா குருவின் வாழ்க்கையைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்க முனைந்துள்ளது விர்ச்சுவல் பாரத்.
இந்த யோகா பயணத்திற்காக நாம் உத்தரபிரதேசத்தின் வாரணாசிக்கு செல்ல வேண்டும். சுவாமி சிவானந்தா என்ற 123 வயது மனிதனின் கதையைச் சொல்கிறது இந்தப் படம் . ஆகஸ்ட் 8, 1896 இல் பிறந்த சுவாமி சிவானந்தா இந்த வருடம் 124-வது அகவையில் காலெடுத்து வைக்கிறார். இதனால் பூமியில் உயிரோடு வாழும் அதிக வயதான மனிதர் என்ற பெருமையைப் பெறுகிறார். இருந்தாலும், கின்னஸ் உலக சாதனை புத்தகம் நீண்ட காலம் வாழ்ந்த மனிதர் என்று அவருக்கு இன்னும் சான்றளிக்கவில்லை.
இரண்டு மணி நேரம் முழுக்க யோகா, பருப்பு ரொட்டி மற்றும் காய்கறிகள் நிறைந்த சப்ஜி தான் உணவு, மீதமுள்ள நேரத்தில் கீதையைப் படிப்பது என்று தினமும் தனது பொழுதைக் கழித்து வருகிறார். அவரைப் பொறுத்தவரை, இந்த ஒழுக்கமும் எளிமையும் தான் இந்த இத்தனை வயது வரை வாழ வைத்திருக்கிறது என்று நம்புகிறார். “யோகா மன அமைதியையும் மகிழ்ச்சியையும் தருகிறது,” என்று அவர் கூறுகிறார்.
சுவாமி சிவானந்தா தனது ஆறு வயதிலேயே பெற்றோரை இழந்தார். பின்னர் ஆறுவயது முதல் யோகா வாழ்க்கைக்குள் நுழைந்துள்ளார். லக்ஸம்பர்க், ஆஸ்திரியா, சவுதி அரேபியா, நெதர்லாந்து என மொத்தம் கிட்டத்தட்ட 50 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று வந்துள்ளார்.
நீண்ட காலம் வாழ்வதற்கான ரகசியம் பற்றி அவரிடம் கேட்கப்பட்ட போது, “எல்லோரும் பேராசை கொண்டவர்கள். எனவே அவர்களால் இத்தனைக் காலம் வாழ முடியாது என்று சிரித்துக் கொண்டே சொல்கிறார். “நான் வயதானவர் மட்டுமல்ல, உலகின் மகிழ்ச்சியான வாழ்க்கை மனிதனும் கூட!”
விர்சுவல் பாரத் என்ற யூடுயூப் சேனலில் அவரது வாழ்க்கை பற்றி தொகுப்பு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. நீங்கள் அதைக் காண்பதன் மூலம் யோகாவின் உன்னதத்தைப் புரிந்து கொண்டு நல்வாழ்வு வாழ முடியும்.









