புதுச்சேரியில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வரும் நவம்பர் 2-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்டாக் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:
''நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஏஎம்எஸ் உள்ளிட்ட மருத்துவ இளநிலைப் படிப்புகளுக்கு (அரசு மற்றும் அகில இந்திய நிர்வாக ஒதுக்கீடு) சென்டாக் www.centacpuducherry.in இணையதளத்தில் அக்டோபர் 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
பொது விடுமுறை நாட்கள் மற்றும் சான்றுகள் பெறுவதில் உள்ள சிரமத்தைக் கருத்தில் கொண்டு விண்ணப்பிக்கும் கால அளவை நீட்டிக்கப் பெற்றோர் மற்றும் மாணவர்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். அதன் அடிப்படையில் இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி நவம்பர் 2-ம் தேதி மாலை 5 மணி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.''
இவ்வாறு சென்டாக் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய www.centacpuducherry.in எனும் சென்டாக் இணையதளத்தைப் பார்க்கலாம்.