தினமும் குறைந்த பட்சம் அரை மணி நேரமாவது இசையைக் கேட்பது இதயத்திற்கு நல்லது என்பது, ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக முதல் தடவை மாரடைப்பு பாதிப்பை எதிர்கொண்டவர்கள், தொடர்ந்து இசையை ரசித்து கேட்கும் பட்சத்தில் அவர்களுக்கு மீண்டும் மாரடைப்பு வரும் ஆபத்து குறைவாக உள்ளது என்பதும் அந்த ஆய்வு மூலமாகத் தெரிய வந்துள்ளது.
இதுமட்டுமின்றி நெஞ்சு வலி, பதற்றம் ஏற்படாதவாறு, மனதை இலகுவாக வைத்திருக்கும் மகத்துவம் இசைக்கு உண்டு என்பதையும் அந்த ஆய்வை செய்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இசையைக் கேட்பது கூட ஒருவித சிகிச்சை முறை தான் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். எந்தவொரு நோயையும் அணுகக் கூடிய எளிய மருந்தாக இசை இருப்பதாகவும், அதனால் நோயாளிகள் ‘மியூசிக் தெரபி’ சிகிச்சை மேற்கொள்வது பயனளிக்கும் என்றும் குறிப்பிடுகிறார்கள்.
செர்பியாவில் மாரடைப்பு ஏற்பட்ட 350 பேரை இந்த ஆய்வுக்கு உட்படுத்தி இருக்கிறார்கள். அவர்களை தினமும் மியூசிக் தெரபி சிகிச்சை அளித்து பரிசோதனை செய்துள்ளனர். அவர்களின் உடல்நிலை, மனநிலைக்கு ஏற்ற இசையைத் தேர்ந்தெடுத்து தினமும் 30 நிமிடங்கள் கேட்க வைத்திருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் அவர்களைக் கண்காணித்து இந்த ஆய்வு முடிவை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். சோதனை முடிவில் நெஞ்சுவலி, மாரடைப்பு, பதற்றம் போன்ற எந்த பாதிப்பும் அவர்களுக்கு ஏற்படவில்லை.
இதுதொடர்பாக ஆராய்ச்சிக் குழுவின் தலைவரான பிரெட்ராக் மிட்ரோவிக் கூறுகையில், “நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் மருத்துவ சிகிச்சையின் போதும், வீடு திரும்பிய பிறகும் மனதுக்குப் பிடித்தமான இசையைக் கேட்கலாம். இதன் மூலம் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் வலுவடைவார்கள். அவர்களிடத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
அதனால் நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் வீட்டிலேயே மியூசிக் தெரபியாக இசையைக் கையாண்டால் இதய பாதிப்பில் இருந்து விடுபடலாம். ஒருமுறை மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு மீண்டும் வராமல் இருக்க சிறந்த வழிமுறையாக இசை விளங்குகிறது. முதலில் சாதாரணமாகத் தான் இசையை கேட்கிறார்கள். பின்னர் இசைக்குள்ளேயே மூழ்கி, ஆழ்ந்து ரசிக்கத் தொடங்குகிறார்கள்’’ என்கிறார்.









