வரும் டிசம்பர் 1 -ம் தேதி முதல் மருத்துவ கல்லூரிகள் திறக்கலாம் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
கொடிய உயிர் கொல்லி நோயான நோவல் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் இறுதியில் மூடப்பட்டது. தமிழகம் உட்பட ஒரு சில மாநிலங்களில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மருத்துவ கல்லூரிகளை மீண்டும் திறக்கலாம் என தேசிய மருத்துவ கவுன்சில், மத்திய சுகாதாரத்துறைக்கு பரிந்துரையை செய்துள்ளது இதனை ஏற்று, அனைத்து மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
அதில், மருத்துவ கல்லூரிகளை மீண்டும் திறக்க சுகாதாரத்துறை மற்றும் உள்துறை அமைச்சகத்திடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. எனவே, மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி டிசம்பர் 1-ம் தேதியோ அல்லது அதற்கு முன்னரோ மருத்துவக் கல்லூரிகளை திறக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும், 2020-21 புதிய கல்வியாண்டு வகுப்பு பிப்ரவரி 1 -ம் தேதி முதல் தொடங்கும் என்றும், முதுநிலை வகுப்பு ஜூலை 1 முதல் தொடங்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.