பித்தப்பையில் என்ன மாதிரி பிரச்னைகள் வருகின்றன?
பித்தப்பை, கல்லீரலில் உற்பத்தியாகும் பித்த நீரை, தற்காலிகமாக சேகரித்து வைக்கிறது. பித்தப்பை சுருங்கும் போது இதில் இருக்கும் பித்தநீர், சிறுகுடலுக்கு செல்கிறது. இந்த பித்த நீர்தான், செரிமானத்துக்கு உதவுகிறது. இந்த பித்தப்பையின் இயக்கத்தில் பாதிப்பு ஏற்படும் போது, கற்கள் உருவாகி பெரும் சிரமத்தை கொடுக்கிறது.
பித்தப்பையில் கற்கள் எதனால் உருவாகிறது?
பித்தப்பை கற்கள் என்பது, சிறுகற்கள் போன்ற ஒரு பரிமாண பொருள். உணவில் கொழுப்புச்சத்து அதிகமாக சேர்த்துக் கொள்பவர்களுக்கு, கொழுப்பு கற்கள் உருவாகும். குறிப்பாக, உடல் பருமனாக உள்ளவர்களுக்கும், திடீரென்று உடல் இளைப்பவர்களுக்கும், கருத்தடை மாத்திரை அதிகம் உபயோகிப்பவர்களுக்கும் ஏற்படுகின்றன.
இந்த பிரச்னையில் பெண்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். உடல் பருமன், வாயுத் தொல்லை, குழந்தை பேறு, 40 வயதை கடப்பது போன்ற காரணங்களால், பெண்களுக்கு பித்தப்பை கற்கள் உருவாகின்றன.
கற்கள் இருப்பதை கண்டறிவது எப்படி?
அல்ட்ரா சவுண்ட் சோதனை மூலம் எளிதாக கண்டறியலாம். அறிந்த பின் உணவு கட்டுப்பாடு அவசியம். எண்ணெய் மற்றும் கொழுப்பு சத்துள்ள பொருட்களை கட்டுப்படுத்த வேண்டும். பித்தப்பையில் கற்கள் தோன்றுவதால், பித்தப்பையில் கிருமி தொற்று, பித்தக்குழாய்களில் அடைப்பு மற்றும் அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பித்தப்பை கற்களால் என்ன பதிப்பு ஏற்படும்?
கற்கள் உருவாகி இருந்தால், வயிற்றில் கடுமையான வலி உண்டாகும். வயிற்றின் மேல் பாகத்தில் வலது புறம் வலி இருந்து கொண்டே இருக்கும். அல்சர் என்று தவறாக நினைத்து, மருந்து சாப்பிடுவார்கள். பசி இல்லாதது, அடிக்கடி ஏப்பம், அஜீரணம், வயிறு உப்புசம் ஏற்படும். தொடர்ந்து வாயுத்தொல்லை, தொடர் காய்ச்சல் இருக்கும். இந்நிலையில் பரிசோதனை செய்து பார்க்க வேண்டியது அவசியம். உடனே கவனிக்கவில்லை என்றால், நாளத்தில் அடைப்பு, மஞ்சள் காமாலை, சிறுநீரகம், நுரையீரல் போன்ற உறுப்புகள் பாதிக்கும். பித்தக்கற்கள் அகற்றப்பட வில்லை என்றால், புற்றுநோய் கட்டியாக மாறவும் வாய்ப்பு உள்ளது.
பித்தப்பை கற்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?
உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது அவசியம். தவறினால், பித்தப்பை அழுகி விட வாய்ப்பு உண்டு. இந்த நிலையில் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும்.
கற்களை அகற்ற என்ன மாதிரியான சிகிச்சை செய்யப்படுகிறது?
கற்கள் இருந்தால் உடனே அறுவை சிகிச்சை செய்து அகற்றுவது நல்லது. பித்தப்பை குழாயின் கீழ் பகுதியில் மட்டும் கற்கள் உள்ளவர்களுக்கு, நேரடியாக கற்களை அகற்றலாம். நோயாளியின் வாய் வழியாக கேமராவுடன் கூடிய ஒரு குழாயினை செலுத்தி கற்களை அகற்றலாம். பாதிப்பு அதிகம் இருந்தால், பித்தப்பையை முழுமையாக அகற்றுவது நல்லது.
பித்தப்பையை அகற்றினால் பாதிப்பு ஏற்படாதா?
எந்த பாதிப்பும் ஏற்படாது. ஜீரணத்திலும் பிரச்னை வராது. லேபராஸ்கோப்பி சிகிச்சை மூலம் வயிற்றைக் கிழிக்காமல், மிக சிறிய துளைகள் மூலம் கருவிகளை அனுப்பி, பித்தப்பையை வெட்டி அகற்றி விடலாம். அழுகிப்போன பித்தப்பையையும் இந்த சிகிச்சை முறையில், அகற்றி விட முடியும்.
- டாக்டர் செந்தில்
பகிர்வு
''பித்தப்பையில் கற்கள் இருந்தால், உடனே அறுவை சிகிச்சை செய்து அகற்றுவது நல்லது,'' என்கிறார் அபிராமி மருத்துவமனை ஜீரண மண்டல அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர். செந்தில்.