
2021 சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று காலை வெளியிடப்படுகிறது. ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிடுகிறார்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் 2021 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளில் கட்சிகள் களமிறங்கியுள்ள நிலையில் தேர்தல் ஆணையமும் சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகி வருகிறது.
தேர்தல் நடக்க அடிப்படையான ஒன்று வாக்காளர் பட்டியல். எனவே இன்று முதல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெற உள்ளது. இன்று காலை 10.30 மணியளவில் சட்டமன்ற தொகுதி வாரியாக வரைவு வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வெளியிட உள்ளனர்.
இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான இறுதி தேதி டிசம்பர் 15ஆம் தேதி முடிகிறது. மேலும் பொதுமக்கள் எளிமையாக அணுகும் வகையில் நவம்பர் 21, 22 மற்றும் டிசம்பர் 12, 13 தேதிகளில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இதன் மூலம் வாக்காளர்கள் , வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யப்பட வேண்டி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பொதுமக்கள் அளிக்கும் இந்த விண்ணப்பத்தின் மீது ஜனவரி 5 க்குள் நடவடிக்கை எடுக்கவேண்டும். பின்பு ஜனவரி 20இல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.










