ஆன்லைனில் பணத்தை இழந்தவருக்கு ஒரு மணி நேரத்தில் சைபர் கிரைம் போலீஸார் மீட்டுக் கொடுத்துள்ளனர்.
சென்னை, முகலிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் (55). இவர் உணவு ஆர்டர் செய்வதற்காக ஒரு எண்ணைத் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது ஒரு செயலியை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்யுமாறு கூறி, அதற்கான லிங்கை அனுப்பிஉள்ளனர். கணேஷ் அச்செயலியை பதிவிறக்கம் செய்தவுடன், அவரது வங்கிக்கணக்கிலிருந்து ரூ.25 ஆயிரம் இணையதளம் மூலம் பணபரிவர்த்தனை செய்யப்பட்டிருப்பதாக குறுந்தகவல் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கணேஷ், அம்பத்தூர் காவல் மாவட்ட சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளித்தார்.
அவர்கள் நடத்திய விசாரணையில், அடையாளம் தெரியாத நபர் அனுப்பிய லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியில் இருந்து புகார்தாரரின் கைப்பேசிக்கு வரும் ஓடிபியை பயன்படுத்தி ரூ.25 ஆயிரம் மோசடிசெய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து சைபர் கிரைம் போலீஸார், கணேஷ் கணக்குவைத்துள்ள ஸ்டேட் வங்கிக்கு தகவல் தெரிவித்து அவருக்கு உரிய வழிகாட்டுதலின்படி பணத்தை கொடுக்கும்படி கூறினர்.
அதன்பேரில் ஸ்டேட் வங்கி நிர்வாகத்தினர், கணேஷின் வங்கி கணக்கில் ரூ.25 ஆயிரம் செலுத்தினர். பணம் இழந்த 1 மணி நேரத்தில் மீட்டு கொடுத்த அம்பத்தூர் சைபர் கிரைம் காவல் குழுவினருக்கு கணேஷ் நன்றி தெரிவித்தார்.