வரும் 26-ம் தேதி பகுதி நேர ஊழியர்கள், தினசரி ஊதியம் பெறுவோர், தொகுப்பூதியம் பெறுவோர் போராட்டத்தில் ஈடுபட்டால், அவர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, அனைத்து கூடுதல் தலைமை செயலாளர்கள், முதன்மை செயலாளர்கள், செயலாளர்கள், அனைத்து துறை தலைவர்கள், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு, தலைமை செயலாளர் சண்முகம் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், அகில இந்திய அளவில் 26-ம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என மத்திய வர்த்தக சங்கங்கள், ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
26-ம் தேதி அன்று அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு வரவில்லை எனில் அது 'ஆப்செண்ட்- வே கருதப்படும். அந்த நாளுக்கான சம்பளமும், சலுகையும் அளிக்கப்படாது.
பகுதி நேர ஊழியர்கள், தினசரி ஊதியம் பெறுவோர், தொகுப்பூதியம் பெறுவோர் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள்.
26-ம் தேதி அன்று மருத்துவ விடுப்பு தவிர, தற்காலிக விடுப்பு உள்ளிட்ட வேறு எந்த விடுப்பை எடுத்தாலும் அது அனுமதிக்கப்படாது.
எனவே, அன்றைய தினம் அலுவலகத்திற்கு வருகை தருபவர்கள் விவரத்தை, தங்கள்துறை செயலாளர்களுக்கு 26-ம் தேதி காலை 10 மணி 15 நிமிடத்திற்கு அறிக்கையாக அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.