
மதுரை: மருத்துவப் படிப்புக்கான கட்டணம் செலுத்த முடியாத ஏழை மாணவிக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி அளித்திருக்கிறார் திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. சரவணன்.
மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகா தேவி. படிப்பில் கெட்டிக்காரப் பெண்ணான இவர் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். எளிய குடும்ப பின்னணியை கொண்ட இவர் இந்தாண்டுக்கான கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார்.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வும், மருத்துவருமான சரவணனிடம் மாணவி கார்த்திகா தேவியின் நிலை குறித்து அவரது குடும்பத்தினர் தெரியப்படுத்தி உள்ளனர். நம்பிக்கையும், தைரியமும் அளித்து அவர்களை அனுப்பி வைத்த சரவணன் எம்.எல்.ஏ. நேற்று மாணவி கார்த்திகா தேவியின் இல்லத்திற்கே சென்று இரண்டு லட்ச ரூபாய்கான காசோலையை வழங்கினார்.
சரவணனின் இந்த உதவியை கண்டு கார்த்திகா தேவியின் பெற்றோர் நெகிழ்ந்துவிட்டனர். மேலும் எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் மருத்துவ படிப்பில் முழு கவனம் செலுத்துமாறும், எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் எனவும் அவரிடம் டாக்டர் சரவணன் எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார்.
அரசியலில் கிடைத்த வரை லாபம் என சுருட்டிக் கொண்டு செல்பவர்கள் மத்தியில் கையில் இருப்பதை தொண்டு செய்வதற்காக கரைப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
source: oneindia.com








