எதற்காக கடைப்பிடிக்கிறோம், என்ன பலன்கள் கிடைக்கும், விரத முறைகள் என்ன என்று எதுவுமே தெரியாமலேயே அதிகாலையில் முண்டியடித்து விஷ்ணு கோயில்களில் வைகுண்ட ஏகாதசி நாளன்று, நானும் சொர்க்க வாசலைக் கடக்கிறேன் பேர்வழி என்று வரிசையில் நிற்கிறோம்.என்ன பலன்கள், எப்படி விரதமிருக்க வேண்டும்? எப்படி வழிப்பட வேண்டுமென்று பார்க்கலாம் வாருங்கள்.
விஷ்ணுவின் திருவருளை பெற ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து குளித்து, வழக்கமாக செய்யும் பூஜைகள் மற்றும் அனுஷ்டானங்களை முடித்து மகாவிஷ்ணுவை மனதில் இருத்தி வழிபட வேண்டும். அன்றைய நாள் முழுவதுமே உபவாசம் இருப்பது நல்லது. தாகசாந்திக்காக தண்ணீர் குடிக்கலாம்.ஏகாதசி திருநாளில் ஆலயம் சென்று விஷ்ணுவை வழிபடுவது சிறப்பு.

உடல் நலக் குறைபாடு இருப்பவர்கள்,இயலாதவர்கள், வயதானவர்கள் சுவாமிக்கு நிவேதனம் செய்யப்பட்ட பழங்களை மட்டும் சாப்பிடலாம்.குளிர்ந்த நீரை மட்டுமே குடித்து உபவாசம் இருக்க வேண்டும். மழை மற்றும் குளிர் மாதமாக இருப்பதால் ஏழு முறை துளசி இலைகளை சாப்பிடலாம். உடலுக்கு வெப்பம் கிடைக்க இந்தத் துளசி உதவியாக இருக்கும். விரதம் இருப்பதால், செரிமான உறுப்புகளுக்கு ஓய்வும், வயிறு சுத்தமும் அடைகிறது.

பகலிலும், இரவிலும் தூங்காமல் கண் விழித்து இறைச் சிந்தனையுடன் எம்பெருமானைக் குறித்த கதைகள், பாடல்கள் ஆகியவற்றைப் படித்துக் கொண்டிருக்கலாம். மறுநாள் துவாதசி காலையில் நித்யப்படி பூஜைகளை முடித்து அன்னதானம் செய்து அகத்திக் கீரை, நெல்லிக்காய் , சுண்டைக்காய் இவற்றுடன் ஒருவேளை மட்டுமே உணவருந்தலாம். அன்றைய இரவும் பழங்கள் அல்லது டிபன் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யலாம் .
இந்த முறையில் விரதம்
இருந்து விஷ்ணுவை வழிபாடு செய்திட இதுவரை வாழ்வில் நாம் அறிந்தும்,
அறியாமலும் செய்த அனைத்து பாவங்களையும் மன்னித்து முக்தி அளித்து நம்மை தம்
அருகிலேயே இருத்திக் கொள்வார் என்பது ஐதீகம். ஏகாதசி விரதம்
அனுஷ்டிப்போம். விஷ்ணுவின் அருள் பெறுவோம்.
ஓம் நமோ நாராயணாய!









