சென்னை: சென்னை ஐ.ஐ.டி-யில் 66 மாணவர்கள் உள்ளிட்ட 71 பேருக்கு கொரோனா
தொற்று ஏற்பட்டுள்ளதால் சுகாதாரத்துறை செயலாளர் நேரில் ஆய்வு
மேற்கொண்டிருக்கிறார். சென்னை ஐ.ஐ.டி-யில் தங்கி படித்துவந்த சுமார் 104
மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. நேற்று வரை
66 மாணவர்கள் உட்பட 71 பேருக்கு பாதிப்பு இருந்த நிலையில் இன்று 33
பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர்
தெரிவித்திருந்தார். டிசம்பர் மாதம் தொடங்கி இதுவரை என்ன நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டன என்பது தொடர்பான ஒரு விரிவான தகவல்
வெளியிடப்படவிருக்கின்றது. டிசம்பர் 1ம் தேதி 2 பேருக்கு இருந்த பாதிப்பு
தற்போது 104 பேருக்கு பரவியிருக்கிறது. குறிப்பாக ஐ.ஐ.டி-யில் உள்ள
உணவகத்தில் அதிகளவில் கொரோனா பரவியதாக கண்டறியப்பட்டிருக்கிறது. இதனால்
கேண்டீன் முழுவதுமாக மூடப்பட்டிருக்கின்றது. மாணவர்கள் அவரவர் தங்கியிருந்த
அறையிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஒரு அறைக்கு ஒரு மாணவர் வீதம்
தங்கவைக்கப்பட்டுள்ளனர். வகுப்புகள், ஆய்வகங்கள், நூலகங்கள் என அனைத்தும்
மூடப்பட்டிருக்கிறது.
தற்போது ஐ.ஐ.டி. முழுவதும் கிருமிநாசினி
தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தும் பணிகளானது நடைபெற்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை ஐ.ஐ.டி.
வளாகத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வின் போது
மருத்துவத்துறை அதிகாரிகள், மாநகராட்சியை சேர்ந்த சுகாதாரத்துறை
அதிகாரிகளும் உடனிருக்கின்றனர். எவ்வாறு மாணவர்களுக்கு கொரோனா பரவியது
என்பது தொடர்பாக விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. ஐ.ஐ.டி.யில் உள்ள
இயக்குனர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளே ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும் கொரோனா பரவலை தடுப்பதற்கான நடவடிக்கை என்ன என்பது குறித்து இந்த
ஆய்வின் போது அவர்கள் ஆலோசிக்கவுள்ளனர். அதில் அடுத்தகட்ட நடவடிக்கையை
எப்படி மேற்கொள்வது. மீதமுள்ள நபர்களுக்கு எப்படி கொரோனா பரிசோதனை செய்வது.
அவர்களை எப்படி தனிமைப்படுத்துவது என்பது குறித்து முழுமையான ஆலோசனை
நடத்தப்படவிருக்கிறது.









