
சென்னை: 'பேராசிரியர்கள் இல்லாத நிலையில், புதிய கல்லுாரிகளுக்கான தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.அவரது அறிக்கை: தமிழகத்தில் புதிதாக துவக்கப்பட்டுள்ள, 10 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளுக்கு, இன்னும் பேராசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. அவற்றில் சேர்ந்த மாணவர்கள், பாடங்களை படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.இதனால், அந்த கல்லுாரிகளில் சேர்ந்த மாணவர்களால், பாடங்களை படிக்க முடியவில்லை; தேர்வுக்கு தயாராக வேண்டிய மாணவர்களுக்கு, இது, மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.எனவே, முதல்கட்டமாக, இதுவரை பேராசிரியர்கள் நியமிக்கப்படாத, ஏழு கல்லுாரிகளுக்கும், உடனே அனைத்து பாடங்களுக்கும் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும். அடுத்ததாக, 10 கல்லுாரிகளிலும், முதல் பருவ தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும். இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.இட ஒதுக்கீடு ஏன்?ராமதாஸ் மற்றொரு அறிக்கை:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், நடப்பாண்டில் நடத்திய முதல் தொகுதி தேர்வுகளில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில், ஆறு துணை கலெக்டர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில், ஒரு வன்னியர் கூட இடம் பெறவில்லை. வன்னியர்களுக்கு மட்டும், 20 சதவீத தனி ஒதுக்கீடு கிடைத்திருந்தால், ஆறு துணை கலெக்டர் பணிகளும் வன்னியர்களுக்கு கிடைத்திருக்கும். அனைத்து நிலைகளிலும் குறைந்தது, 20 சதவீதம் பிரதிநிதித்துவம் பெறும் நிலையை உருவாக்குவதற்காகவே, வன்னியர்களுக்கு, 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு கோரி, தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளோம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.








