கே.பாலகிருஷ்ணன்
தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நடப்பு ஆண்டிலேயே துவங்கிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை துவங்குவதற்கு மத்திய அரசு அனுமதியளித்ததையொட்டி தமிழக அரசு ரூ. 1200 கோடி நிதி ஒதுக்கி கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த 11 மருத்துவக் கல்லூரிகளில் தலா 150 மருத்துவ இடங்கள் வீதம் மொத்தம் 1650 மருத்துவ இடங்கள் புதிதாக கிடைத்துள்ள நிலையில் இக்கல்லூரிகளில் நடப்பாண்டிலேயே (2020-2021) மாணவர் சேர்க்கை துவங்கும் என முதல்வர் அறிவித்திருந்தார்.
ஏற்கனவே உள்ள மருத்துவ இடங்களுக்கு மட்டும் மருத்துவ கலந்தாய்வு நடந்துள்ள நிலையில் 2021-2022, 2022-2023 ஆண்டுகளில் தான் மாணவர் சேர்க்கை துவங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதர மாநிலங்களில் நடப்பாண்டிலேயே புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கும், எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கும் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது போல, தமிழகத்திலும் புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடப்பாண்டிலேயே துவங்கிட, தமிழகத்தின் உரிமையை காப்பாற்றிட தமிழக அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொண்டுள்ளது.









