* ஏன் தூங்கவேண்டும்?
நம் உடல் சரியாக இயங்குவதற்கு தூக்கம் இன்றியமையாத ஒன்று. நம் உடல் சோர்வை மட்டும் இது போக்குவதில்லை. அதையும் தாண்டி, சில முக்கியமான உடல், மனரீதியான பிரச்சினைகளிலிருந்தும் நம்மை விடுவிக்க உதவுகிறது. நாம் ஒருநாள் இரவில் சரியாக உறங்கவில்லையென்றால், அடுத்த நாள் நமது கண்களில் எரிச்சல் ஏற்படும். தூங்கும் நேரம் தவிர மற்ற எல்லா நேரமும் கண்கள் இயக்கத்தில் இருக்கும். அவற்றுக்கு ஓய்வு கொடுக்க, தூக்கம் மிக அத்தியாவசியமானது. நமது உடலிலிருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், திசுக்களையும் செல்களையும் புத்துணர்வடையச் செய்யவும் உறக்கம்தான் உதவுகிறது. மற்றவர்களை ஒப்பிடும்போது, நன்றாகத் தூங்கும் பழக்கமுடையவர்களின் நினைவாற்றல் மிகச் சிறப்பாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
* தூக்கமின்மை உண்டாக்கும் சிக்கல் என்ன?
சரியாகத் தூங்கவில்லையென்றால், இதயநோய், மன அழுத்தம், சோர்வு ஆகிய பாதிப்புகளுடன் சராசரி உடல் இயக்கமும் தடைப்பட வாய்ப்புள்ளது. என்னதான் கடுமையாக உழைத்து, செல்வத்தை சேர்த்துவைத்தாலும், அதை அனுபவிக்க உடல்நலம் நன்றாக இருக்க வேண்டும். உடலை சரியாக பராமரிக்க, சரியான அளவுக்கு ஓய்வு அவசியம். அதற்கு உதவுவதுதான் தூக்கம் என்பதை தெரிந்துகொண்டு, நன்றாக தூங்குவோம், நோயின்றி வாழ்வோம்!