தமிழகத்தை போன்று புதுச்சேரியிலும், 9, 10 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு தேர்வுகள் ரத்து செய்யலாமா என்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் அனைத்து அரசு, அரசு உதவி பெறும், தனியார், பள்ளிகள், இன்று முதல் முழு நேரமும் செயல்படும் என்றும் வழக்கமான பள்ளி நேரப்படி 1 முதல் 12ஆம் வகுப்புகள் அனைத்தும், திங்கள் முதல் சனிக்கிழமை வரை பள்ளிகள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், ஓராண்டுக்கு பிறகு இன்று முதல் முழு நேர வகுப்புகள் தொடங்கின. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பால் வழங்கும் திட்டத்தை, மீண்டும் தமிழிசை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தை போன்று புதுச்சேரியிலும், 9,10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யலாமா என்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்டுள்ளதாகவும் அதன்படி அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருவதாகவும் கூறினார்.