மகள் பெயரில் வீடு வாங்கி யிருந்தாலும் மூலதன ஆதாயத் துக்கான வரி விலக்கு பெற முடியும் என வரி தீர்ப்பு மேல் முறையீட்டு ஆணையம் (ஐடிஏடி) உத்தரவு பிறப்பித்துள்ளது
பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் தனது வாரிசுதாரர்களுடன் இணைந்து ரூ.2,60,46,754 தொகைக்கு சொத்து விற்பனை செய்துள்ளார். சொத்தின் உரிமை யாளர், அவரது மனைவி, வாரிசு களான மகன் மற்றும் விதவை மகள் ஆகியோருக்கு இந்த சொத்தில் பங்கு உள்ளது.
இந்த சொத்து விற்பனை மூலம் கிடைத்த தொகையை அவர் தனது விதவை மகள் பெயரில் ஒரு வீடு வாங்குவதற்கு முதலீடு செய்துள்ளார். அந்த வகையில் வருமான வரிச் சட்ட பிரிவு 545எப்-ன் கீழ் அவருக்கு வரி விலக்கு பெறுவதற்கு தகுதி உள்ளதாக கூறப்பட்டது. இந்தத் தொகையில் அவர் ரூ. 2,07,75,230 தொகைக்கு வரி விலக்கு கோரியிருந்தார்.
தனது விதவை மகளுக்கு வீடு வாங்குவதற்கு சொத்து விற்பனை மூலம் கிடைத்தத் தொகையை மறு முதலீடு செய்துவிட்டதாகவும், இதற்கு வரி விலக்கு தர வேண்டும் என வரி தீர்ப்பு மேல் முறையீட்டு ஆணையத்திடம் மேல் முறையீடு செய்திருந்தார். இதை விசாரித்த தீர்ப்பாயம், வரி விலக்கு பெறுவதற்கு அவருக்கு வழி வகை உள்ளதாக தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
சொத்து விற்பனை மூலம் பெறப்பட்ட தொகையை சம்பந்தப்பட்டவரே முழுமையாக மறு முதலீடு செய்து புதிய சொத்து வாங்கினால் மட்டுமே வரி விலக்கு பெற முடியும் என்பதல்ல. சம்பந்தப்பட்டவர்கள் அந்தத் தொகையை வீடு அல்லது நிலம் வாங்குவதற்கு முதலீடு செய்திருக்க வேண்டும் என்பதுதான் வருமான வரி சட்டம் 54 எப் விதி கூறுகிறது.
இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதிகள், சொத்து விற்பனை மூலம் கிடைக்கும் ஆதாயத்தில் வாரிசுதாரர்களுக்கு உரிமை உள்ளது. மேலும் விற்பனை மூலம் கிடைத்த தொகையை மறு முதலீடாக விதவை மகளுக்கு வீடு வாங்கித் தந்துள்ளார். அவருக்கு வேறு வருமான வழி இல்லாத சூழலில் மூலதன ஆதாயத்துக்கு வரி விதிப்பது சரியான அணுகுமுறையல்ல என கருதுவதாக தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.