'இன்ஜினியரிங் உள்ளிட்ட தொழில்நுட்ப கல்லுாரிகளில், அடுத்த மாதம் 31ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும்' என, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ., கெடு விதித்துள்ளது.
நாடு முழுதும் கொரோனா தொற்று காரணமாக, பெரும்பாலான மாநிலங்களில் பொது தேர்வுகள் நடத்தப்படவில்லை. சில மாநிலங்கள் தேர்வை நடத்த, மத்திய அரசின் அனுமதி கேட்டுள்ளன.இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை பணிகளை, பல்வேறு மாநிலங்களும் தீவிரப்படுத்தி உள்ளன. ஏ.ஐ.சி.டி.இ., சார்பில், புதிய கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை மற்றும் வகுப்புகள் நடத்துவதற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.அதில், 'நாடு முழுதும் உள்ள அனைத்து பல்கலைகளும், தங்கள் எல்லைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இணைப்பு அந்தஸ்து வழங்குவதை வரும் 15ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.'இன்ஜி., கவுன்சிலிங்கின் முதல் சுற்று மாணவர் சேர்க்கையை, ஆக., 31க்குள் நடத்த வேண்டும். ஏற்கனவே படித்து கொண்டிருக்கும் மாணவர்களுக்கு, செப்., 1; புதிய மாணவர்களுக்கு, செப்., 15 முதல் வகுப்புகளை துவக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.