தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும், இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலை தேடுவோர், வேலை அளிக்கும் நிறுவனங்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர்.
இதுதொடர்பாக, வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை, கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் (Professional Employment and Career Guidance Centre) மையத்தில் காலை 10.00 மணி முதல் 2.00 மதியம் மணி வரை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், 8ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் எதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் இம்முகாமில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருபதுக்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு காலிப் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் பதிவு இரத்து செய்யப்படமாட்டாது என்றும், வேலையளிக்கும் நிறுவனங்களும் வேகைதேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.









