ஆதார் அட்டையில் இருக்கும் புகைப்படத்தை மாற்ற விரும்புவோர், இனி தாங்களே அதை செய்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியக் குடிமக்களுக்கு பிரத்யேக அடையாள எண்களை வழங்குவதற்காக ஆதார் அட்டை விநியோகிக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது. நமது புகைப்படம், வீட்டு முகவரி ஆகியவற்றுடன் 12 இலக்கங்களை கொண்ட பிரத்யேக எண்ணும் ஆதார் அட்டையில் இடம்பெற்றிருக்கும்.
அதுமட்டுமல்லாமல், நமது கண் மற்றும் கைரேகை அடங்கிய பயோமெட்ரிக் தரவுகளும் ஆதார் அட்டையில் அடங்கியிருக்கும். அதேபோல, நமது செல்போன் எண்ணும் அதில் இணைக்கப்பட்டிருக்கும்.
முதலில், ஒரு சாதாரண அடையாள அட்டையாக கருதப்பட்ட ஆதார், நாளடைவில் அத்தியாவசியமான ஒன்றாக மாறிப் போனது. பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பது முதல் பணியில் சேர்வது வரை ஆதார் அவசியமாகி விட்டது.
இந்நிலையில், ஆதார் அட்டையில் நமது பெயர், முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை மாற்றும் வசதி ஏற்கனவே உள்ளது. ஆனால், புகைப்படங்களை மாற்றும் வசதி இல்லாமல் இருந்தது. தற்போது இந்த வசதியும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதுவும், நாமே நமக்கு விருப்பமான புகைப்படத்தை மாற்றிக் கொள்ளலாம். இதுகுறித்து விவரம் வருமாறு:
முதலில், ஆதாரின் அதிகாரப்பூர்வத் தளமான uidai.gov.in-க்கு சென்று அதிலிருக்கும் ஆதார் பதிவு படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
பின்னர், அந்த படிவத்தில் உள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, அருகில் உள்ள ஆதார் பதிவு மையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
அங்கிருக்கும் நிர்வாகி அனைத்து விவரங்களையும் பயோமெட்ரிக் சரிபார்ப்பு மூலம் உறுதி செய்வார்.
அதன் பிறகு, ஆதார் அட்டையில் புதுப்பிக்கப்பட வேண்டிய புதிய புகைப்படத்தை அதில் அப்டேட் செய்வார்.
இதையடுத்து, அதற்கான ஒப்புகைச் சீட்டு மற்றும் புதுப்பிப்பு கோரிக்கை எண்ணை (URN) வழங்குவார். இந்த சேவைக்கு 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்டும்.
இதன் தொடர்ச்சியாக, புகைப்படம் புதுப்பிக்கப்படுவதற்கு 90 நாட்கள் வரை ஆகும். அதன் பின்னர், ஆதார் பதிவு சென்று புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டையை வாங்கிக் கொள்ளலாம். இல்லையெனில், UIDAI-இன் அதிகாரப்பூர்வ வலைதளத்துக்கு சென்று இ - ஆதார் நகலை பதிவிறக்குவதன் மூலம் புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டையை அச்சிடலாம்.