நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 8ஆம் தேதி அக்டோபர் 25,2022 செவ்வாய்க்கிழமை பகல் 02.28 மணி முதல் மாலை 06.32 மணி வரை துலாம் ராசியில் சுவாதி நட்சத்திரத்தில் நிகழும் கேது கிரஹஸ்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியும்.
சூரிய கிரகண நேரத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.
பொதுவாகவே மூன்று விதமான சூரிய கிரகணம் நடக்கிறது. முழு சூரிய கிரகணம், வளைய சூரிய கிரகணம், பகுதி சூரிய கிரகணம். சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலா வரும் போது சூரியனை நிலவு மறைக்கிறது. இதுதான் கிரகணம். சூரியனை நிலவு மறைப்பது போல தோன்றும் சில இடங்களில் இந்த முழு சூரிய கிரகணம் தோன்றும்.
ஜோதிட ரீதியாக சந்திரனையோ, சூரியனையோ ராகு மறைக்கும்போது ராகு க்ரஷ்தம் என்றும், கேது மறைக்கும்போது கேது க்ரஷ்தம் என்றும் சாஸ்த்திரங்கள் கூறுகின்றன. பொதுவாக கிரகண தோஷம் கெடு பலன்களைத் தான் தரும் என்பார்கள். சூரிய கிரகண தோஷம்தான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் சொல்வதுண்டு.
கிரகணங்கள்
கிரகணங்கள் பற்றி நிறைய நம்பிக்கைகள், புராண கதைகள் இருந்தாலும் அறிவியல் ரீதியாக பார்த்தால் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு வரும் போது சூரியனை நிலவு மறைக்கிறது. இதுதான் சூரிய கிரகணம். சூரியன் ரொம்ப பெரியது நிலா எப்படி மறைக்க முடியும் என்று கேட்கலாம். நம்முடைய பூமியில் இருந்து பார்க்கும் போது சூரியனை நிலவு மறைப்பது போல தோன்றும். இன்னும் சில நாட்களில் சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் நன்றாக தெரியும்.
கிரகணம் ஆரம்பம் + முடிவு
சென்னையில் மாலை 05 மணி 13 நிமிடத்தில் சூரிய கிரகணம் தொடங்குகிறது. மாலை 6 மணி 25 நிமிடத்தில் கிரகணம் முடிகிறது. மும்பையில் மாலை 04 மணி 49 நிமிடத்திற்கு சூரிய கிரகணம் ஆரம்பிக்கிறது. 06 மணி 31 நிமிடத்தில் கிரகணம் முடிகிறது. டெல்லியில் மாலை 04 மணி 28 நிமிடத்தில் சூரிய கிரகணம் தொடங்குகிறது. மாலை 6 மணி 25 நிமிடத்தில் கிரகணம் முடிகிறது. கொல்கத்தாவில் மாலை 04 மணி 51 நிமிடத்தில் சூரிய கிரகணம் தொடங்குகிறது. மாலை 6 மணி 23 நிமிடத்தில் கிரகணம் முடிகிறது.
யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்
கிரகணம் நிகழும்பொழுது பொது ஜனங்களை விட, கர்ப்பிணி பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். சூரிய கிரகணம் நிகழும் நேரத்தில் கர்ப்பிணிப் பெண்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதே நல்லது. அப்படியே வெளியே வந்து வெளி வெளிச்சம் பட்டால், கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கக்கூடிய சில கதிர் வீச்சுகள் தாக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறன. அதன் காரணமாக பிறக்ககூடிய குழந்தைகளுக்கு சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளன.
என்ன செய்யக்கூடாது
கிரகண நேரத்தில் சமையல் செய்ய கூடாது. முக்கியமாக சாப்பிடக்கூடாது. தண்ணீர் அருந்தக்கூடாது. நகம் கிள்ளக் கூடாது. எந்த வேலையும் செய்யக்கூடாது. கிரகண கதிர்கள் தாக்காமல் இருக்க உணவுப் பொருட்களில் தர்பையை போட்டு வைப்பது மரபாகும். கிரகண நேரத்தின் போது, எதுவும் சாப்பிடக் கூடாது. முன்னதாகவே சாப்பிட்டுக் கொள்ளலாம். அதேபோல், கிரகணம் முடியும் போது, தர்ப்பணம் செய்வது மிகவும் புண்ணியங்களையும் மனோபலத்தையும் தரும் என்கிறது சாஸ்திரம்.
கிரகண நேரத்தில் என்ன செய்யலாம்
கிரக தோஷங்களையெல்லாம் நீக்கிவிடும் இதனை கிரகணத் தர்ப்பணம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு. கிரகணத்தின் போது, ஜபம், தியானம் செய்து கொண்டிருக்கலாம். தெரிந்த ஸ்லோகங்களைச் சொல்லிக் கொண்டிருக்கலாம். விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம், சிவ புராணம் சொல்வது, கேட்பது நன்மை தரும்.
பல மடங்கு புண்ணியம்
சூரிய கிரகண நேரத்தில், யாகசாலை அமைத்து ஹோமங்கள் செய்வது மிகவும் பலம் தரும். நூறு மடங்கு புண்ணியங்களையும் பலத்தையும் தரும் ஹோமமானது இந்த வேளையில் செய்யப்படும் போது ஆயிரம் மடங்கு புண்ணியமும் பலமும் உண்டாகும். கிரகணம் முடிந்து வீட்டில் விளக்கேற்றி வழிபட்டு விட்டு அருகில் கோயில்களுக்குச் சென்று அர்ச்சனை செய்யலாம். அரிசி, நல்லெண்ணெய் முதலானவற்றை தானம் தருவது மிகுந்த பலனையும் புண்ணியத்தையும் தரும்.
கிரகண தோஷம்
சித்திரை, சுவாதி, விசாகம், சதயம், திருவாதிரை போன்ற கிரகண தோஷமுள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சாந்தி பரிகாரம் செய்து கொள்ளவும். சூரிய அஸ்மனத்திற்கு பிறகுதான் கிரகணம் முடிவடைகிறது எனவே சூரிய அஸ்தமனம் வரை மட்டுமே கிரகணத்தை பார்க்க முடியும். விரதம் இருந்து கிரகணம் முடிந்த உடன் குளித்து விட்டு கோவிலுக்கு போய் விட்டு வந்து சாப்பிடலாம்.
சந்திர கிரகணம்
சூரிய கிரகணம் முடிந்து 15 நாட்களில் சந்திர கிரகணம் நிகழ உள்ளது. ஐப்பசி மாதம் 22ஆம் தேதி நவம்பர் 08,2022 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 02.38 மணி முதல் மாலை 06.19 மணி வரை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. மேஷ ராசியில் பரணி நட்சத்திரத்தில் ராகு கிரஹஸ் முழு சந்திர கிரகணம் இந்தியாவில் பகுதி கிரகணமாக தெரியும். பகல் நேரத்தில் கிரகணம் தொடங்குவதால் இந்தியாவில் பார்க்க முடியாது. சூரிய அஸ்தமனம் முடிந்த பிறகு சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியும். அசுவினி, பரணி, கிருத்திகை, பூரம்,பூராடம் நட்சத்திரங்கள் தோஷமுள்ள நட்சத்திரங்கள் என்பதால் விரதம் இருந்து கிரகணம் முடிந்த பின்னர் குளித்து விட்டு கோவிலுக்கு சென்று வந்த பின்னர் சாப்பிடலாம்.