மதுரையில் சர்வதேச பள்ளிகள் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவர்கள் இஸ்ரோவுக்கு கல்வி பயணம் சென்றனர்.
மதுரையைச் சுற்றி உள்ள 7 மாவட்டங்களைச் சேர்ந்த 200 அரசுப் பள்ளி மாணவர்கள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு (இஸ்ரோ) கல்வி சுற்றுலா சென்றனர்.
அரசு பள்ளி மாணவர்களின் திறனை கண்டறிய அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அண்மையில் கலைத்திருவிழா நடத்தப்பட்டது. அதில் பல மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். இதேபோல் கல்வி மற்றும் கண்டுபிடிப்புகள் ரீதியாகவும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அவர்களின் திறமைகள் பெரிய அளவில் வெளியே வந்து கொண்டிருக்கிறது.அதற்கு அரசின் சிறப்பான நடவடிக்கை காரணம் என கூறப்படுகிறது.
மதுரையில் சர்வதேச பள்ளிகள் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 200 மாணவர்கள் வெற்றி பெற்றனர். இதையடுத்து மதுரையில் உள்ள குயின் மீரா சர்வதேச பள்ளி சார்பில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் மாணவர்களை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு (இஸ்ரோ) கல்விமுறை பயணமாக அழைத்துச் செல்லும் நிகழ்ச்சி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்ஷயம் ஓட்டலில் நேற்று நடந்தது.
இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எம்.எஸ்.ரமேஷ், பாடலாசிரியர் மதன் கார்க்கி, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விஷன் 2020 நிறுவனர் திருச்செந்தூரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர், இஸ்ரோ செல்லும் மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்துகளை கூறி வழியனுப்பி வைத்தார்கள்.,
இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் வாழ்த்தி பேசும் போது, வானிலை ஆய்வு மையத்தில் என்னுடைய அப்பா வேலை செய்து வந்தார். வானிலையை தெரிந்துகொள்ள இருக்குற மாதிரி வசதிகள் அப்போது இல்லை. இப்போது உள்ள செயற்கைக்கோள்கள் எல்லாம் அப்போது இல்லை. ராட்சத பலூன் மூலம் கருவிகளை அனுப்பித்தான் வானிலையை ஆய்வு செய்வார்கள்.
தினமும் நிறைய பலூன்கள் அதுபோல பறக்கவிடுவார்கள். அதன்பிறகு திடீரென செயற்கைக்கோள்களை அனுப்பி வானிலை தரவுகளை தெரிந்துகொண்டார்கள். அப்போது எல்லாம் இஸ்ரோ செல்ல மிகவும் ஆசைப்பட்டேன். ஆனால் முடியவில்லை. லட்சியத்தை அடைய வேண்டும் ஒருவேளை நான் இஸ்ரோவுக்கு சென்றிருந்தால் என்னுடைய பைலட் கனவு நிஜமாகி இருந்திருக்கும். எங்களுக்கு கிடைக்காத வாய்ப்பு இப்போது மாணவர்களாகிய உங்களுக்கு கிடைத்துள்ளது. அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒவ்வொருவரையும் முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு உங்கள் லட்சியத்தை அடைய வேண்டும்" இவ்வாறு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் கூறினார்