குரு பகவான் மீனம் ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். ஏப்ரல் மாதம் முதல் மேஷ ராசியில் ராகு உடன் இணைக்கு குரு பகவான் பயணம் செய்வார்.
அக்டோபர் மாதம் ராகு கேது பெயர்ச்சி நிகழப்போகிறது அதன் பின்னர் தனித்த குருவாக மேஷ ராசியில் பயணம் செய்யப்போகிறார். குரு பகவான் பயணம் மற்றும் பார்வையால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
குரு பகவான் மனிதர்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்துவார். நல்ல வேலை, திருமண வாழ்க்கை, குழந்தை பாக்கியம், பண வருமானம் போன்றவை கிடைக்க குரு பகவானின் அருள் தேவை. எனவேதான் ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் குரு பெயர்ச்சியை பலரும் எதிர்பார்ப்பார்கள். இந்த 2023ஆம் ஆண்டு துவக்கத்தில் சனி பெயர்ச்சி நிகழ்ந்தது. ஏப்ரல் 22ஆம் தேதி குரு பெயர்ச்சி நிகழப்போகிறது. அக்டோபர் மாதம் ராகு கேது பெயர்ச்சி நிகழப்போகிறது.
புராண காலத்தில் குருவால் ஏற்பட்ட மாற்றங்களை எடுத்துரைக்கும் பாடல் இது. 1, 3, 4, 6, 8, 12 ஆகிய இடங்களில் குரு சஞ்சரிக்கும் போது என்ன நடந்தது என்று இந்த பாடல் மூலம் சொல்லப்பட்டுள்ளது. 'ஜென்ம ராமர் வனத்திலே சீதையைச் சிறை வைத்ததும்,தீதிலா தொரு மூன்றிலே துரியோதனன் படை மாண்டதும்,
இன்மை எட்டினில் வாலி பட்டமிழந்து போம் படியானதும், ஈசனார் ஒரு பத்திலே தலையோட்டிலே யிரந்துண்டதும்
தருமபுத்திரர் நாலிலே வனவாசம் அப்படிப் போனதும்,சத்திய மாமுனி ஆறிலே இரு காலிலே தளை பூண்டதும்,
வன்மை யற்றிட ராவணம் முடி பனிரெண்டினில் வீழ்ந்ததும்.மன்னு மா குரு சாரி மாமனை வாழ்விலா துறமென்பவே!'
குரு பகவான் சுப கிரகம் நிறைய நன்மைகளைக் கொடுப்பார். குருவின் பார்வை சுபிட்சங்களைத் தரும். இந்த குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு எந்த இடத்தில் குரு பயணம் செய்யப்போகிறார் என்ன மாதிரியான பலனைத் தரப்போகிறார் என்று பார்க்கலாம்.
மேஷ ராசிக்காரர்களே..உங்கள் தலைமேல் அமர்ந்துள்ள ராகு உடன் குரு இணையப்போகிறார். வெளிநாட்டுக்கு வேலை, படிப்புக்காக செல்லலாம். தொழில், வேலையில் கவனம் தேவை. பெரிய அளவில் அகலக்கால் வைக்க வேண்டாம். வெளிநாடுகளில் தொழில் தொடங்கலாம். வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. வாழ்க்கையில் மிகப்பெரிய உயர்வுக்கு செல்லப்போகிறீர்கள். நல்ல காரியங்கள் நடைபெற மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்க சிவ ஆலயங்களில் நவ கிரக குரு பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.
விரைய குரு - ரிஷபம்
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே, விரைய குரு காலம், சுப செலவுகள் அதிகரிக்கும். நிலம், சொத்து வகையில் பணத்தை முதலீடு செய்யலாம். தங்க ஆபரணங்கள் வாங்கலாம். கூட்டுத் தொழில் செய்ய இது ஏற்ற காலமில்லை. அரசு வேலைக்கு முயற்சி செய்யலாம். போட்டித்தேர்வில் வெற்றிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பண விசயங்களில் கவனம் தேவைப்படும் காலமாகும்.
லாப குரு - மிதுனம்
குரு
பகவான் லாப ஸ்தானத்தில் அமரப்போகிறார் குருபகவான் தொட்டது
துலங்கப்போகிறது. வேலையில் புரமோசன் கிடைக்கும். செய்யும் தொழில்
விருத்தியாகும். புதிய தொழில் தொடங்கலாம். திருமணம் நடைபெறும்.
விவாகரத்தானவர்களுக்கு மறுமணம் நடைபெறும். திருமணமான தம்பதியினருக்கு
புத்திரபாக்கியம் கிடைக்கும்.
பொன்னால காலம் பிறக்கப்போகிறது.
கர்ம ஸ்தான குரு - கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு பத்தாம் வீடான கர்ம ஸ்தானத்தில் குருபகவான் பயணம் செய்கிறார். தொழில் வியாபாரத்தில் அகலக்கால் வைக்க வேண்டாம். பத்தில் குரு வரப்போவதால் பதவியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலையில் கவனமும் நிதானமும் தேவை. அலுவலகத்தில் உயரதிகாரிகளிடம் வம்பு வைத்துக்கொண்டால் வேலை பறிபோகும் ஆபத்து உள்ளது. உயரதிகாரிகள் சொல்வதை கேட்டு நடப்பது நல்லது.
பாக்ய குரு - சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் விருத்தி ஏற்படும். வெளிநாட்டு வேலை கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அஷ்டம குருவினால் வேலையிழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கப் போகிறது. குருவின் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைப்பதால் இனி கவலைகள் கஷ்டங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கப்போகிறது.
அஷ்டம குரு - கன்னி
கன்னி ராசிக்காரர்களே..அஷ்டம ஸ்தானத்தில் பயணிக்கும் குரு எந்த விசயத்திலும் கவனம் தேவை. வெளியூர் வெளிநாட்டு பயணங்களைத் தரப்போகிறார் குருபகவான். திருமணமாகி நீண்ட நாட்களாக பிள்ளை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியத்தை தருவார். பணம் விசயங்களில் கவனமும் நிதானமும் தேவைப்படும்.
களத்திர குரு - துலாம்
துலாம் ராசிக்காரர்களே..குரு பகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை நேரடியாக பார்வையிடுகிறார். 12 ராசிகளில் அதிக பலனை அடையப்போவது துலாம் ராசிக்காரர்கள்தான். திருமண யோகம் கைகூடி வரும். குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். குருபார்வை கிடைத்தாலே வாழ்க்கை பொன்னாக ஜொலிக்கும். மகிழ்ச்சியை அனுபவிக்கத் தயாராகுங்கள்.
ருண ரோக சத்ரு குரு - விருச்சிகம்
உங்கள் ராசியில் இருந்து ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் குரு பயணம் செய்யப்போகிறார். வேலை செய்யும் இடத்தில் நிதானமும் கவனமும் தேவை. குரு பயணிக்கும் இடம் கடன் வம்பு வழக்கு இடம் என்பதால் வங்கிக் கடன் வாங்கி இடம் வீடு நிலம் வாங்கலாம். ஆவணங்களை சரி பார்த்து வாங்குவது அவசியம். அலுவலகத்தில் உயரதிகாரிகளால் தொல்லைகள் ஏற்படும். கவனமாகவும் நிதானமாகவும் அடி எடுத்து வைப்பது நல்லது.
பூர்வ புண்ணிய குரு - தனசு
தனுசு ராசிக்காரர்களுக்கு ராசி நாதன் குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானமான
ஐந்தாம்
வீட்டில் பயணம் செய்யப்போவதால் பிள்ளைகள் வாழ்க்கையில் சுப காரியங்கள்
ஏற்படும். வீடு பராமரிப்பு செய்யலாம். ஜாமீன் கையெழுத்துப் போட்டு
யாருக்கும் பணம் கடனாக வாங்கித் தர வேண்டாம். கையில் இருக்கும் பணத்தை
சொந்த பந்தங்களுக்கு கடனாகத் தர வேண்டாம். இந்த குரு பெயர்ச்சி உங்கள்
வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது.
சுக ஸ்தான குரு - மகரம்
மகர ராசிக்காரர்களே ஏழரை சனியால் பல ஆண்டு காலமாக கஷ்டங்களை மட்டுமே சந்தித்து வரும் உங்களுக்கு குரு பகவானால் இனி வரும் காலங்கள் பாதிப்பை குறைத்து சந்தோஷத்தை அதிகரிக்கும். வேலை தொழிலில் மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கஷ்டங்கள் குறைந்து கவலைகள் நீங்கப் போகிறது இந்த குரு பெயர்ச்சி உங்களின் வாழ்க்கையில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தப்போகிறது.
தைரிய குரு - கும்பம்
கும்ப ராசிக்காரர்களே..குரு பகவான் இரண்டாம் வீட்டில் இருந்து மூன்றாம் வீட்டிற்குப் போகிறார். ஏழரை சனி இருப்பதால் எந்த பிரச்சினை என்றாலும் கவலைப்பட வேண்டாம். பொறுமையும் நிதானமும் தேவை. குரு மூன்றில் மறைவதால் முயற்சிகளை கை விட வேண்டாம். காலம் கடந்தாலும் வெற்றி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமாகும்.
குடும்ப குரு - மீனம்
மீன ராசிக்காரர்களே ஜென்ம குரு இடப்பெயர்ச்சியாகி ராசிக்கு இரண்டாம் வீட்டிற்கு செல்கிறார். இனி தடைகள் நீங்கி நன்மைகள் நடைபெறும். திடீர் பண வருமானம் வரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். சுபிட்சமான கால கட்டமாகும். குரு பகவானின் பார்வையால் உங்களுக்கு நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். சுபிட்சமான வாழ்க்கை கிடைக்கும்.