வீட்டில் காலி சிலிண்டர்களை மாற்றும் போது மிகவும் கவனமாக மாற்ற வேண்டும். இப்போதெல்லாம் சிலிண்டர் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.
தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுக்கவே சிலிண்டர் தொடர்பான விபத்துகள் நிறைய நடந்து வருகின்றன. மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள சிலிண்டர்களை முறையாக கையாள வேண்டும்.
இந்த வருடத்தில் மட்டும் கடந்த 3 மாதங்கள் 20க்கும் மேற்பட்டோர் சிலிண்டர் வெடிப்பு காரணமாக நாடு முழுக்க பலியாகி உள்ளனர். சென்னையில் கடந்த மாதம் ஒருவர் பலியானார்.
சிலிண்டர்
இப்படி சிலிண்டர் விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதில் இருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி. சிலிண்டர்களை கவனமாக கையாள்வது எப்படி என்று இங்கே பார்க்கலாம். முதலில் நீங்கள் பயன்படுத்தும் சிலிண்டர்களை வெளியே வைக்க வேண்டும். அதாவது கிட்சனிலேயே மூடப்படாத இடத்தில் வைக்க வேண்டும். இப்போது பலரும் மாடுலர் கிச்சன்களை பயன்படுத்துகிறார்கள்.
அதில் சிலிண்டர் முழுக்க முழுக்க உள்ளேதான் இருக்கும். அப்படி பயன்படுத்த கூடாது. மாறாக, திறந்த இடத்தில் கிச்சனில் சிலிண்டரை வைக்க வேண்டும். அடைத்து வைத்தால் லீக் ஆகும் பட்சத்தில் கேஸ் வெளியே செல்லாது. அது சிலிண்டர் வெடிக்க காரணமாக அமையும்.
இரண்டு சிலிண்டர்களை அருகருகே வைக்க வேண்டாம். ஒரு சிலிண்டர் லீக் ஆகி தீ பிடித்தால் கூட இன்னொரு சிலிண்டர் வெடிக்கவும் இது காரணமாக அமையும். அதனால் சேதாரங்கள் அதிகமாக இருக்கும்.
சிலிண்டர்கள் இருக்கும் அறையில் மின் கசிவு இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளவும். வயரிங் சரியாக செய்யப்பட்டு இருக்கிறதா என்றும் பார்த்துக்கொள்ளுங்கள். சிலிண்டர் இருக்கும் பகுதிக்கு அருகே எக்காரணம் கொண்டும் எக்டன்ஷன் பாக்ஸ் பயன்படுத்தவே கூடாது.
சிலிண்டரில் கசிவு சோதனை செய்ய வேண்டும். ஒவ்வொரு முறை சிலிண்டர் வாங்கி அதை பயன்படுத்தும் முன் வாய் பகுதியில் தண்ணீர் ஊற்றி திவலைகள் வருகிறதா என்று பார்க்க வேண்டும். மொட்டு போல பபுள் வந்தால் கசிவு உள்ளது என்று அர்த்தம். அதேபோல் அதன் வாய் பகுதி சரியாக இருக்கிறதா என்று சோதனை செய்து வாங்கவும்.
காலி சிலிண்டரை மாற்றும் போது கவனமாக இருக்க வேண்டும். கசிவு இருக்கிறதா என்று பார்த்துவிட்டு காலி சிலிண்டரை தூக்கி செல்ல வேண்டும். சமீபத்தில் சென்னையில் இப்படி காலி சிலிண்டரை முழுமையாக சோதிக்காமல் மாற்றியவர் விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
முழுமையாக சிலிண்டர் காலியாகி விட்டதா என்பதை சோதனை செய்துவிட்டு அதன்பின் மாற்ற வேண்டும்.