ஆண்டு இறுதி தேர்வுகள் முடிந்து விட்டால், வரும், 28ம் தேதிக்கு முன், மாணவர்களுக்கு விடுமுறை விட, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.தமிழக அரசு பாடத்திட்ட பள்ளிகளில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொது தேர்வுகள் முடிந்துள்ளன.
10ம் வகுப்பு பொது தேர்வு வரும், 20ம் தேதி முடிகிறது.ஒன்று முதல் 9ம்
வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இம்மாதம், 11ம் தேதி முதல், 28ம்
தேதிக்குள், ஆண்டு இறுதி தேர்வுகளை நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டு
உள்ளது.ஆனால், பல மாவட்டங்களில், இந்த மாதம், 11ம் தேதி தேர்வை துவங்கிய
தேர்வுகள், வரும், 24ம் தேதிக்குள் முடியும் நிலையில் உள்ளது.தேர்வுகளை
முடித்த மாணவர்களுக்கு, வரும், 28ம் தேதி வரை பள்ளிகளை நடத்த வேண்டுமா;
விடுமுறை விட வேண்டுமா என, கமிஷனரகத்தில், முதன்மை கல்வி அலுவலர்கள்
கேட்டுள்ளனர்.இதையடுத்து, தேர்வுகளை முடித்த மாவட்டங்களில் மட்டும், தேர்வு
முடிந்த நாளில் இருந்து கோடை விடுமுறை விடலாம் என, பள்ளிக்கல்வி கமிஷனர்
நந்தகுமார் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி ஆகியோர், அறிவுறுத்தி
உள்ளனர்.மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்தாலும், ஆசிரியர்களுக்கு வரும்,
28ம் தேதி வரை பணி நாட்கள் தான். எனவே, அவர்கள் அடுத்த கல்வி ஆண்டுக்கான
முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என, அதிகாரிகள்
உத்தரவிட்டுள்ளனர்.அதேநேரம், விடுமுறைக்காக ஏற்கனவே அறிவித்த தேர்வு கால
அட்டவணையை மாற்றி, முன்கூட்டியே தேர்வுகளை நடத்த வேண்டாம் என்றும், மாவட்ட
கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.