தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நுழைவு நிலை வகுப்பில் குழந்தைகளை சேர்க்க, ஏப்ரல் 20ஆம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை, வயது வரம்பு, காலியிடங்கள் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் குறித்து அறியலாம் வாங்க... கட்டுரைக்கு போவோம்...!
Who are all eligible for applying RTE admission?
* கல்வி உரிமைச் சட்டம் சொல்வதென்ன?
கல்வி உரிமை சட்டம்-2009இன் படி நலிந்த, பின் தங்கிய வகுப்பு குழந்தைகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் இலவசமாக கல்வி பெற, 25 சதவீதம் சேர்க்கை வழங்கப்படுகிறது.
சிறுபான்மை அல்லாத எல்லா பள்ளிகளும், தங்களின் மொத்தம் உள்ள இடங்களில் 25 சதவீதத்தை நலிந்த, பின் தங்கிய குழந்தைகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும்.
* பள்ளிக் கட்டணங்கள் முற்றிலும் இலவசமா?
இல்லை. இச்சட்டத்தின் கீழ், கல்வி கட்டணம் மட்டுமே முற்றிலும் இலவசம். புத்தகங்கள், சீருடைகள், பள்ளி வேன் உள்ளிட்ட செலவுகளை குழந்தைகளின் பெற்றோர்கள் ஏற்க வேண்டும்.
* எல்லா குழந்தைகளுக்கும் இச்சட்டத்தின் வாயிலாக கல்வி உரிமை வழங்கப்படுகிறதா?
இல்லை. 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு மட்டும் இந்த கல்வி வழங்கப்படும். 6 வயது வரையில் உள்ள குழந்தைகள் ஒருங்கிணைக்கப்பட்ட வளர்ச்சித் திட்ட சேவைகள் மூலமும், நர்சரி பள்ளிகளின் மூலமும் கல்வி பயின்று வருகின்றனர். 14 வயதிற்கு பின், அதவாது எட்டாவது வயதிற்குப்பின் குழந்தைகளின் கல்வியை உறுதி செய்யும் சட்டம் இந்தியாவில் இல்லை.
* நுழைவு நிலை வகுப்பில் மட்டும் தான் சேர்க்கை நடைபெறுமா?
ஆம். தனியார் பள்ளிகளில் எல்,கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்ப செயல்முறை மட்டுமே, தற்போது நடைபெற உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள தனியார் பள்ளியில் LKG ஆரம்ப வகுப்பாக இருந்தால், அப்பள்ளியில் LKG சேர்க்கைக்கான விண்ணப்பத்தை பெறலாம். அதே சமயம் ஒன்றாம்வகுப்பு ஆரம்ப வகுப்பாக இருந்தால், அந்த வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்பத்தை பெறலாம். பள்ளி, எந்த வகுப்பில் ஆரம்பிக்கிறதோ அந்த வகுப்பில் சேர்க்கை நடைபெறும்.
இரண்டாம் வகுப்பு முடித்து 3ம் வகுப்பு செல்லும் குழந்தைகளின் பெற்றோர்கள், தற்போது புதிதாக இச்சட்டத்தின் கீழ் 25% ஒதுக்கீட்டில் பயில இடம் கோர முடியாது.
எனவே, உங்கள் குழந்தையை RTE சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் சேர்க்க விரும்பினால், LKG அல்லது ஒன்றாம் வகுப்பிலேயே சேர்க்கை பெற வேண்டும். அப்படி சேர்க்கைப் பெற்ற குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் இலவசமாக கிடைக்கும்.
* சேர்க்கை எப்படி நடைபெறுகிறது?
நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட, கூடுதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டால், குலுக்கல் மூலம் மாணவர்கள் தேர்வு நடைபெறும். நாட்டின் ஏனைய மாநிலங்களில், இந்த குலுக்கல் முறை ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் அந்தந்த பள்ளிகளில் நேரடியாக நடைபெறுகிறது. இந்த குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர் பட்டியல் RTE இணைய தளத்திலும், அந்தந்த பள்ளிகளின் பெயர் பலகையிலும் வெளியிடப்படும்.
* விண்ணப்பபம் எப்படி நடைபெறுகிறது?
வெளிப்படை தன்மையை உறுதி செய்யும் வகையில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. நிலவரங்களை அறிந்து கொள்ள பள்ளி கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிட வேண்டும்.
* நலிந்த பிரிவினர் யார்?
பட்டியல் இனத்தவர், பட்டியல் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள், பெற்றோர்களை இழந்த குழந்தை, தூய்மைப் பணியாளர்களின் குழந்தை, எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் குழந்தை, திருநங்கையர்களின் வளர்ப்பு குழந்தை ஆகியவர்கள் இந்த தனியார் பள்ளிகளில் உள்ள 25 சதவீத இடங்களின் கீழ் சேர்க்கை கோரலாம்.
* பின் தங்கிய குழந்தைகள் என்றால் யார்?
பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்திற்கு குறைவாக இருக்கும் குழந்தைகள், இந்த பிரிவின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
* தமிழ்நாட்டின் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் இந்த சட்டம் பொருந்துமா?
பொருந்தும். நாட்டில் உள்ள அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் RTE சட்ட விதிகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆனால், சிபிஎஸ்இ பள்ளிகள், RTE சேர்க்கை தொடங்குவதை செய்தியாக ஊடகங்களில் வெளியிடுவதில்லை.
ஆர்வமும், தகுதியும் உள்ள பெற்றோர்கள் அந்தந்த பள்ளிகளுக்கு நேரடியாக சென்று 25 சதவீத இடங்களின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களை பெற்றோர்கள் அறிய விரும்பினால், கீழே கொடுக்கப்பட்ட லிங்க் கிளிக் செய்து அறியலாம்.