தமிழக பள்ளிக் கல்வி துறை கமிஷனர் நந்தகுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பின் மாற்றப்பட்டுள்ளார். அப்பொறுப்பு மீண்டும் இயக்குனர் வசமே ஒப்படைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் பள்ளிக் கல்வி துறையின் தலைமை பொறுப்பான இயக்குனர் பதவி நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக ஐ.ஏ.எஸ்., அதிகாரி நந்தகுமார், கமிஷனராக நியமிக்கப்பட்டார். துறையின் தலைமை பொறுப்பு மற்றும் அதிகாரங்கள் இவர் வசம் ஒப்படைக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து பள்ளிக் கல்வி நிர்வாக முறைகளில் மாற்றங்களை கொண்டு வந்தார். இதில் ஆசிரியர்கள் பணியாளர்கள் மத்தியில் எதிர்ப்பும், ஆதரவும் எழுந்தது.
அதேநேரம் பெரும்பாலான ஆசிரியர் சங்கங்கள் துறையின் தலைமை பொறுப்பை மீண்டும் இயக்குனர் வசம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தின. மேலும் 'கமிஷனரை மாற்ற வேண்டும்; கமிஷனர் பதவியை நீக்கக வேண்டும்' என பல சங்கங்கள் தரப்பில் முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டன.
இந்நிலையில் பள்ளிக் கல்வி கமிஷனர் நந்தகுமார் மாற்றப்பட்டு மனிதவள மேம்பாட்டு துறை கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். பள்ளிக் கல்வி கமிஷனர் பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை.
இதையடுத்து பள்ளிக் கல்வியின் தலைமை பொறுப்பு மீண்டும் இயக்குனர்களில் ஒருவருக்கு வழங்கப்படும் என தகவல்கள் பரவுகின்றன.