தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் தற்போது கோடை மழை பெய்து வருகிறது. இதற்கிடையே தான் நாளை கத்தரி வெயில் காலம் துவங்குகிறது.
இதனால் மக்கள் வெப்பத்தின் பிடியில் சிக்க வாய்ப்புள்ளது என்ற நிலையில் தான் வங்கக்கடலில் மே 8 ம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்தே வெயில் வாட்டி வதைத்தது. பல மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸை கடந்து வெயில் மக்களை வாட்டியது. இதற்கிடையே தான் கடந்த 10 நாட்களாக தமிழ்நாட்டின் பல இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது.
இதனால் வெயிலின் கோரபிடியில் இருந்து மக்கள் தப்பித்து வருகின்றனர். இந்நிலையில் தான் புதிய அறிவிப்பு வெளியானது. அதாவது தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்தரி வெயில் காலம் நாளை தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
அக்னி நட்சத்திர காலத்தில் வெயில் என்பது அதிகமாக இருக்கும். இருப்பினும் கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் அக்னி வெயிலை சமாளிக்கும் வகையில் வருண பகவான் கருணை காட்டி வருகிறார். இதனால் மாநிலத்தின் பல இடங்களில் இன்னும் சில நாட்கள் மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தான் வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுபற்றி வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது: தென்இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால் இது வடதமிழகத்தில் மேல் வளிமண்ட கீழடுக்கு சுழற்சி உள்ளது.
இந்த வளிமண்டல சுழற்சி காரணமாக மே 7 ம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகலாம். அதன்பிறகு இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மே 8 ல் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.