பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் மத்திய அரசு அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (யுபிஎஸ்) ஆகியவை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரியான ககன்தீப்சிங் பேடி தலைமையில் தமிழக அரசு ஒரு குழுவை அமைத்தது. அந்த குழு தனது அறிக்கையை வரும் செப். 30-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
இந்தச் சூழலில் ஆக. 18, 25, செப். 1, 8 என 4 நாட்கள் கருத்துகேட்பு கூட்டம் நடந்தது. அதன்படி முதல் சுற்று கூட்டத்தில் தலைமைச் செயலக சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்கம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் உள்பட 40 சங்கங்களின் நிர்வாகிகள் குழுவின் தலைவரான ககன்தீப் சிங் பேடியை சந்தித்து மனு அளித்தனர். அப்போது அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.
தலைமைச் செயலக சங்க மாநில தலைவர் கு.வெங்கடேசன், செயலாளர் சு.ஹரிசங்கர் ஆகியோர் சமர்ப்பித்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது 100 சதவீதம் சாத்தியமே. சிபிஎஸ் திட்டத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள 45,625 பேருக்கு ஒரு பைசாகூட ஓய்வூதியமாக கிடைக்கவில்லை. அரசுக்கு கூடுதல் செலவினம்தான் ஏற்படும். எனவே அத்திட்டத்தை அரசு பரிசீலிக்கக் கூடாது.
சிபிஎஸ் திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்களை சேமநல நிதி திட்டத்தில் (ஜிபிஎப்) இணைத்து, அனைவரையும் தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளின்கீழ் கொண்டு வர வேண்டும். சிபிஎஸ் திட்டத்தில் ஏற்கெனவே ஓய்வுபெற்றவர்களுக்கும் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பணிக்கொடை வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் கவுரவ தலைவர் அ.மாயவன், தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் எஸ்.பிரபாகரன், பொதுச்செயலாளர் பொ.அன்பழகன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் ச.மயில் ஆகியோர் அளித்த அறிக்கையில், “நிதி பற்றாக்குறையால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவில்லை என்று வாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றனர்.
நேற்றைய கருத்துகேட்பு கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து அரசு ஊழியர்- ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளும் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.