100 ஆண்டுகளில் 6 மடங்கு அதிகரித்த உலகின் தண்ணீர் தேவை... ஆனால், தண்ணீர் வளம்? #WorldWaterDay - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Wednesday 21 March 2018

100 ஆண்டுகளில் 6 மடங்கு அதிகரித்த உலகின் தண்ணீர் தேவை... ஆனால், தண்ணீர் வளம்? #WorldWaterDay

 "20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த உலகின் காடுகள் மற்றும் ஈர நிலப்பகுதிகளில் மூன்றில் இரண்டு பங்கை நாம் இழந்துவிட்டோம்" - யுனெஸ்கோவின் இயக்குநர் ஜெனரல் ஆட்ரி அசூலே வெளியிட்டுள்ள அறிக்கை இது. நாளை (மார்ச் 22) உலக தண்ணீர் தினம். இந்த தினத்தில் பேசப்பட வேண்டிய முக்கியமான விஷயமாக இருக்கிறது சமீபத்திய ஐ.நா அறிக்கை.

ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இப்போதுள்ள நிலை நீடித்தால் 2050-ம் ஆண்டுக்குள் 5 பில்லியன் மக்கள் நீர் பற்றாக்குறையால் அவதிப்படுவார்கள். மேலும், உலக அளவில் தண்ணீரானது குறைவான அளவிலேயே இருக்கும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறுகள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள், ஈரநிலங்களை ஆக்கிரமித்துள்ள மக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மிக மோசமான பாதிப்புகள் ஏற்படும். இதேபோல உலக வன அறிக்கையானது வறட்சி நிறைந்த பிரேசிலின் தலைநகரான பிரேசிலியாவில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், "தண்ணீர் வளத்தை அதிகரிப்பதற்கு விவசாயம் சார்ந்த துறைகள்தான் முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் இரும்பையும், கான்கிரீட்டையும் விட்டுவிட்டு மண் மற்றும் மரங்களை நோக்கி நகர முன்வர வேண்டும்" எனச் சொல்லப்பட்டுள்ளது.
ஐ.நா அறிக்கையின்படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4,600 கன கிலோமீட்டர் நீரை மனிதர்கள் பயன்படுத்துகின்றனர். இதில் 70% விவசாயம், 20% தொழில் மற்றும் 10% குடும்பங்களுக்குச் செல்கிறது என்று அறிக்கை தெளிவாக சொல்கிறது. உலகத்தின் தண்ணீர் தேவை கடந்த 100 ஆண்டுகளில் ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் 1 சதவிகிதம் என்ற வீதத்தில் தண்ணீர் தேவை அதிகரித்துக்
கொண்டே இருக்கிறது. தற்போது உலக அளவில் 7.7 பில்லியனில் இருக்கும் மக்கள்தொகை 2050-ம் ஆண்டில் 9.4 முதல் 10.2 பில்லியன் வரை அதிகரிக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் அப்போது மிகப்பெரிய தண்ணீர் தேவை உருவாகும் என ஐ.நாவின் அறிக்கை சொல்கிறது. மேலும் வளர்ந்த நாடுகளில் நீர் ஆதாரங்களை அதிகரிக்கத் திட்டங்கள் வகுக்கப்பட்டுக் கொண்டுள்ளன. இதற்கிடையே பூமியில் காலநிலை மாற்றத்தால் வறட்சி ஏற்பட்டு மிகப்பெரிய அச்சுறுத்தலைக் கொடுக்கும். இதற்கான ஆரம்பம்தான் தற்போது கேப்டவுனில் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்துள்ளது. அங்குக் குடியிருப்பவர்கள் தண்ணீருக்காகக் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். வறட்சிக் காலங்களில் 2 மில்லியன் பிரேசில் மக்கள் ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தண்ணீரைப் பெறுகின்றனர்.
மெக்சிகோ, மேற்கு தென் அமெரிக்கா, தெற்கு ஐரோப்பா, சீனா, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் வறண்ட நிலப்பரப்பில், எதிர்காலத்தில் மழை குறையக்கூடும். இதனால் தண்ணீர் பற்றாக்குறை நிச்சயம் ஏற்படும். அதை நிலத்தடி நீர் விநியோகம் மூலம் மட்டுமே ஈடுசெய்ய முடியாது. அப்போது உலகில் மூன்றில் ஒருபங்கு நாடுகள் மிகுந்த துயரத்தைச் சந்திக்கும். வளரும், வளர்ந்த என அனைத்து நாடுகளிலும் குறைந்த செலவில் தண்ணீரைத் தேக்க சாத்தியமான வழிமுறைகளைக் கண்டறிய முன்வர வேண்டும். அதற்கு அணைக்கட்டுகள் மற்றும் சிறிய நீர்த்தேக்கங்களை அமைப்பதும், பலப்படுத்துவதும் ஒரு தீர்வாக இருக்கலாம்.
1990-களின் தொடக்கத்தில் இருந்தே தண்ணீரின் மாசுபாடு ஆரம்பித்துவிட்டது. அதிலும், ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்க கண்டங்களில் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆற்றின் நிலையும் மிக மோசமாகிவிட்டது. வரும் காலங்களில் நிலைமை மேலும் மோசமடையும். முக்கியமாக விவசாய வேளாண் விளைபொருட்களில் நோய்களின் தாக்கம் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கும். இதற்குத் தொழில் நகரங்கள் ஒரு முக்கியமான பிரச்னையாகும். சுமார் 80% தொழிற்துறை மற்றும் நகராட்சி கழிவுப்பொருள்கள் மறுசுழற்சி செய்யாமல் நீர்நிலைகளில் கலக்கப்படுகிறது. மேலும் இந்த அறிக்கையானது 'பாதுகாப்பு வேளாண்மைக்கு' அழைப்பு விடுகிறது. பாதுகாப்பான வேளாண்மையானது மழைநீரை முறையாகத் தேக்கி வைத்துப் பயன்படுத்துவதாகும். இது பயிர் சுழற்சி முறையைக் கொண்டு வரும். இந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள நல்ல விஷயம் என்னவென்றால், தண்ணீர் தேவையை உணர்ந்து அனைத்து நாடுகளிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், உலகில் தேவைப்படும் மொத்த நீரையும் சேமிக்கும் அளவுக்குச் சாத்தியம் உள்ளது. இதற்கு ராஜஸ்தானில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீர்நிலைகளை மீட்டெடுத்ததும், ஜோர்டானிலுள்ள வறட்சி நிலைக்குத் தள்ளப்பட்ட ஜர்கா நீரோட்டத்தை மீட்டெடுத்து பாரம்பர்ய மண் பாதுகாக்கப்பட்டதும் சிறந்த எடுத்துக் காட்டு. மீட்டெடுத்த நீர்நிலைகளால் விவசாயத்தில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. தண்ணீர் பற்றாக்குறையானது உள்நாட்டு அமைதியின்மை, மக்களின் இடம்பெயர்வு மற்றும் நாடுகளுக்குள்ளேயே மோதல்களுக்கு வழிவகுக்கும். அதனால் உலக நாடுகள் அனைத்தும் தண்ணீர் விஷயத்தில் கவனம் செலுத்த முன்வர வேண்டும். இது உலக நாடுகள் அனைத்திற்குமான எச்சரிக்கை மணி.
1993-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா சபையின் 47-வது கூட்டத்தொடரில் உலக தண்ணீர் தினம் அறிவிக்கப்பட்டது. இந்த வருடத்துடன் உலக தண்ணீர் தினம் ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. ஆனால் தண்ணீரின் விஷயத்தில் உலக நாடுகள் கவனம் செலுத்தவில்லை என்பது உறுதியாகிறது. இன்று ஒருநாள் மட்டும் நீரைப்பற்றிப் பேசிவிட்டு மீதமுள்ள நாட்களில் அதனைப் பற்றி மறந்துவிடுகிறோம். தண்ணீருக்கான பற்றாக்குறையைப் போக்குவதற்காக இனி உலக நாடுகளில் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு மனிதனும் தண்ணீர் சிக்கனத்தை தன்னிடமிருந்தே தொடங்கவும் முன்வரவும் வேண்டும். இந்த அக்கறை நம் பூமிக்காக அல்ல; தாகம் எடுக்கும் நமக்காக!

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H