கல்லூரிகளில் ராகிங்: தடுக்க கண்காணிப்புக்குழு:
சேலம் உள்ளிட்ட, நான்கு மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில், ராகிங் கொடுமையை தடுக்க, பெரியார் பல்கலையில் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.சேலம், பெரியார் பல்கலையின் கீழ், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில், 80க்கும் மேற்பட்ட கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. தற்பொழுது கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்பு துவங்கியுள்ளது. இம்மாணவ, மாணவியரிடையே ராகிங் கொடுமையை தடுப்பதற்காக, அனைத்து கல்லூரி முதல்வர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நேற்று பெரியார் பல்கலையில் நடந்தது.
கூட்ட முடிவில் நிருபர்களிடம் துணைவேந்தர் முத்துச்செழியன்
கூறியதாவது: "பெரியார் பல்கலை நிர்வாகத்தின் கீழ் செயல்படும், எந்த
கல்லூரிகளிலும், விடுதிகளிலும், ராகிங் கொடுமை நடக்காமல் இருக்கும்
நோக்கில், இக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. ராகிங் செய்வது
கண்டுபிடிக்கப்பட்டால், சட்டரீதியான நடவடிக்கை மற்றும் அபராதம்
விதிக்கப்படும்.
ஒவ்வொரு கல்லூரிகளிலும், ராகிங் தடுப்பு பணியில் மூத்த
பேராசிரியர் நியமிக்க வேண்டும். மேலும் மூத்த மாணவர்களை அழைத்து,
கவுன்சலிங் நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சேலம் உள்ளிட்ட நான்கு
மாவட்டங்களிலும், மாணவர்கள் ராகிங் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு
நடவடிக்கைகளை தெரிந்து கொள்ளும் வகையில், பேரணி நடத்தவும், இப்பிரச்சனையை
மனோதத்துவரீதியில் அணுகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில், பெரியார் பல்கலை
சமூகவியல் பேராசிரியர் வெங்கடாசலம் தலைமையில், கண்காணிப்புக்குழு
அமைக்கப்பட்டுள்ளது. ராகிங் தொடர்பான புகார்களை, periyarunivantiragging@gmail.com என்ற முகவரிக்கு இ-மெயில் அனுப்பலாம்.
புகார்களை தெரிவிக்கும் மாணவ, மாணவியர் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும்." இவ்வாறு அவர் கூறினார்.