கல்வி நிறுவனங்கள் அர்ப்பணிப்போடு செயல்பட்டு தரமான கல்வி வழங்க வேண்டும்: ரோசய்யா:
இளைஞர்களுக்கு தரமான கல்வி வழங்குவதற்காக
பல்கலைக்கழகங்களும் உயர் கல்வி நிறுவனங்களும் அர்ப்பணிப்போடு செயல்பட
வேண்டும் என்று ஆளுநர் கே.ரோசய்யா வேண்டுகோள் விடுத்தார்.
சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும்
ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகத்தின் 22-ஆவது பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை
நடைபெற்றது. விழாவில் 1,760 மாணவர்களுக்கு இளநிலை மற்றும் முதுநிலைப்
பட்டங்கள் மற்றும் ஆய்வுப் பட்டங்கள் வழங்கப்பட்டன.
மாணவர்களுக்கு பட்டங்கள் மற்றும் விருதுகளை வழங்கி ஆளுநர் ரோசய்யா ஆற்றிய உரை:
நமது நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள்
மாணவர்களிடம் கற்பனைத் திறனை வளர்க்க வேண்டும். அவர்களுக்கு சிறந்த அறிவை
வழங்குவதோடு, நல்ல மதிப்பீடுகளையும் கற்றுத்தர வேண்டும். அதன்மூலம், நல்ல
பண்புகள் கொண்ட மனிதர்களாகவும் நல்ல குடிமக்களாகவும் அவர்களை மாற்ற
வேண்டும். ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வத்தையும்
அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும்.
இளம் பட்டதாரிகள் புதுமையான சிந்தனை, பன்முகத் திறன் ஆகியவற்றோடு
மனிதத் தன்மையுடைவர்களாகவும் இருக்க வேண்டும். மன உறுதியும், அர்ப்பணிப்பு
உணர்வுமே உங்களை பெரிய உயரத்துக்கு எடுத்துச் செல்லும்.
நாடு உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறது. இந்தியா வல்லரசாக மாறுவது உங்களது கைகளில்தான் உள்ளது.
எந்த வேலையை நீங்கள் தேர்ந்தெடுத்தாலும் அதில் அர்ப்பணிப்பு உணர்வோடு
உண்மையாக உழைக்க வேண்டும். உற்பத்தித் துறையில் இருந்தால் தரத்துக்கு
முக்கியத்துவம் வழங்க வேண்டும். மருத்துவம், மருத்துவம் சார்ந்த துறைகளில்
நீங்கள் பணியாற்றினால் நோயாளிகளிடம் பொறுமையாக நடந்துகொள்ளுங்கள்.
எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தாலும் தன்னலம் பாராமல் உழைக்க வேண்டும் என்றார் ரோசய்யா.
விழாவில் மத்திய இணையமைச்சர் வி.நாராயணசாமி, டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி
மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் வேந்தருமான ஏ.சி.
சண்முகம், பல்கலைக்கழகத்தின் தலைவர் ஏ.சி.எஸ். அருண்குமார், துணைவேந்தர்
டாக்டர் கே. மீர் முஸ்தபா உசேன், பதிவாளர் சி.பி.பழனிவேலு உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.