தொலைநிலையில் படிப்போரே, இது அதுபோன்றதல்ல...
நேரடியாக கல்லூரிக்கு சென்று ரெகுலர் முறையில் படிக்க
முடியாதவர்களுக்காக, அவர்கள் பணி செய்துகொண்டே படிப்பதற்காக கொண்டுவரப்
பட்டதுதான் தொலைநிலைக் கல்வி முறை. இக்கல்வி முறையின் ஒரு நியதியே, இது,
லெக்சர் என்ற வகுப்பறை நடவடிக்கை இல்லாதது என்பதுதான்.
தொலைநிலைக் கல்வியை மேற்கொள்பவர்,
பக்குவப்பட்டவராகவும், எதை செய்ய வேண்டும் என்ற முதிர்ச்சியுடையவராகவும்
இருத்தல் அவசியம். அப்போதுதான், அவரால் வெற்றிகரமாக இம்முறையிலான கல்வியை
நிறைவுசெய்ய முடியும். பள்ளிக் கல்வி வரை, எதற்கெடுத்தாலும், ஆசிரியரின்
உதவியையே நாடி பழக்கப்பட்ட ஒருவருக்கு, கல்லூரி படிப்பை தொலைநிலை முறையில்
மேற்கொள்ளும்போது, எங்கோ நடுக்காட்டில் தனித்துவிடப்பட்டது போன்ற ஒரு
உணர்வு எழலாம்.
கல்வி நிறுவனத்தில் கொடுக்கப்படும் புத்தகங்கள், உங்களுக்கு மிக
முக்கியமான ஒரு உபகரணம். கலைப் படிப்புகளைப் பொறுத்தவரை, இதை முறையாக
படித்தாலே, தேர்வை சிறப்பாக எழுதி விடலாம். மேலும், கல்வி நிறுவன
இணையதளத்தில் கிடைக்கும் பழைய கேள்வித்தாள்கள், தேர்வு எப்படிப்பட்டது
என்பதை அறிந்துகொள்வதற்கான ஒரு முக்கிய வாய்ப்பாகும்.
நூலகங்கள், ஆடியோ-வீடியோ சிடி.,க்கள், இணையதளங்கள் போன்றவையும்
தொலைநிலையில் படிப்பதற்கான முக்கிய உபகரணங்கள். எனவே, தனக்கு எந்தவிதமான
உபகரணம் சரிவரும் மற்றும் அனைத்துமே ஒத்துவருமா என்பதை முடிவு செய்ய
வேண்டியது அவரவர் விருப்பம்.
சிலவகையான படிப்புகளுக்கு, இணையதளங்களில் அதிகளவு படிப்பு உபகரணங்கள்
கிடைக்கும். எனவே, அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தொலைநிலைக் கல்விக்கு
தேவைப்படும் பக்குவத்தை, நமக்கு நாமேதான் வளர்த்துக்கொள்ள வ§ண்டும். நாம்
முதிர்ச்சியடைந்துவிட்டோம் என்பதை, பள்ளிப் படிப்பை முடித்து வெளிவரும்
மாணவர்கள் உணர வேண்டும்.
அதேசமயம், உபகரணங்களில் எழும் சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்கும்
சூழல் ஏற்படலாம். அந்த சமயத்தில், Contact வகுப்புகள் நமக்குப்
பயன்படுகின்றன. அப்போது, உங்களின் சந்தேகங்களை உங்களுக்கு பாடமெடுக்கும்
ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். மேலும், சீனியர்கள் மற்றும்
தெரிந்த படித்தவர்கள் ஆகியோரும் உங்களுக்கு இந்த விஷயத்தில் உதவ முடியும்.
சில வகையான படிப்புகளுக்கு வருகைப் பதிவு(attendance) முக்கியமானதாக
இருக்கும். ஆனால், சிலவகையான படிப்புகளுக்கு, வருகைப் பதிவு கட்டாயமில்லை.
மேலும், சில அறிவியல் சார்ந்த படிப்புகளில், பிராக்டிகல் வகுப்புகள்
கட்டாயம். எனவே, உங்களின் பணிச் சூழல் மற்றும் மனநிலை போன்றவை அதற்கு
ஒத்துவருமா என்பதை யோசித்தே, குறிப்பிட்ட படிப்புகளை தேர்வு செய்ய
வேண்டும்.
விருந்தோம்பல், சுற்றுலா, கேட்டரிங், பேஷன் மற்றும் ஆர்கிடெக்சர் போன்ற
படிப்புகளுக்கு, அதிக பிராக்டிகல் செயல்திட்டங்கள் தேவை. எனவே,
நெருக்கடியான பணிச் சூழலில் இருப்பவர்கள், இதுபோன்ற படிப்புகளைத் தேர்வு
செய்வது உசிதமல்ல. அதேசமயம், எதையும் சமாளிக்க முடியும் மற்றும்
குறிப்பிட்ட படிப்பு, தனது முன்னேற்றத்திற்கு கட்டாயம் தேவை மற்றும் அதில்
ஆர்வம் அதிகம் என்பவர்கள், தாராளமாக இதுபோன்ற படிப்புகளை தேர்வு செய்யலாம்.
பள்ளியில், பலவிதமான கட்டாயங்களுக்கும், போட்டிகளுக்கும் இடையில்
படித்து பழக்கப்பட்ட நாம், தொலைநிலைக் கல்வியில் எந்தவித நெருக்கடி மற்றும்
கட்டாயத்தையும் சந்திக்க மாட்டோம். எனவே, பலருக்கு, புத்தகத்தையே தொடும்
மனநிலை வராது. பணிக்கு சென்று வந்ததும், அப்படியே சோர்ந்துபோய்
படுத்துவிடுவர் மற்றும் விடுமுறை நாட்களில் வேறு வேலைகளுக்கு
சென்றுவிடுவர்.
இதுபோன்ற நபர்களில் பலர், தொலைநிலைக் கல்வியை வெற்றிகரமாக நிறைவு
செய்வதே இல்லை. ஒன்று, பாதியிலேயே விட்டு விடுகிறார்கள், இல்லையெனில்,
வருடக்கணக்காக இழுத்தடித்து முடிக்கிறார்கள். எனவே, தொலைநிலைக் கல்வியை
மேற்கொள்வோர் சுய உந்துதலைக் கொண்டிருக்க வேண்டும். எப்படியாவது
கஷ்டப்பட்டு படித்து, ஒரு பட்டத்தை வாங்கிவிட வேண்டும் என்ற உள்ளார்ந்த
ஆர்வத்தையும், வெறியையும் கொண்டிருக்க வேண்டும்.