குரூப் 2 தேர்வில் நேர்காணல் அல்லாத
பணியிடங்களுக்கான 3 ஆம் கட்ட கலந்தாய்வு வரும் 28 ஆம் தேதி நடைபெற
இருப்பதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.,)
செயலாளர் (பொறுப்பு) வி.சோபனா அறிவித்துள்ளார்.
இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:
குரூப் 2 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கை கடந்த 2012 ஆம்
ஆண்டு ஜூன் 13-இல் வெளியிடப்பட்டது. இந்தப் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு
கடந்த கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி நடைபெற்றது.
இந்த நிலையில், தேர்வு முடிவுகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டன. நேர்காணல்
அல்லாத எஞ்சியுள்ள பதவிகளுக்கு விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்யும்
பொருட்டு 3ஆவது கட்ட கலந்தாய்வுக்கு 197 விண்ணப்பதாரர்கள்
அழைக்கப்பட்டுள்ளனர். பதிவெண்கள் அடங்கிய தற்காலிகப் பட்டியல் தேர்வாணைய
இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ர்ஸ்.ண்ய்) வெளியிடப்பட்டுள்ளது.
இந்தக் கலந்தாய்வு வரும் 28 ஆம் தேதியன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற
உள்ளது.
கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும்
கலந்தாய்வுக்கான தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு தபால்
மூலம் தனியாக அனுப்பப்பட்டுள்ளது. மேற்கண்ட விவரங்கள் அடங்கிய
கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதத்தினை தேர்வாணைய இணையதளத்திலிருந்தும்
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சென்னை பிராட்வேயில் உள்ள பிரேசர் பாலச் சாலையில் உள்ள தேர்வாணைய
அலுவலகத்தில் கலந்தாய்வு நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 8.30 மணியளவில்
சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் கலந்தாய்வு தொடங்கும். மேலும் ஆதரவற்ற
விதவை, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் போன்ற சிறப்பு
பிரிவினர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நேர்காணல் அல்லாத பதவிகளுக்கான
காலிப்பணியிடங்கள் மற்றும் நிரப்பப்படாத பணியிடங்கள் ஏதேனும் இருப்பின்
அவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு பின்னர் நடைபெறும் என்று தேர்வாணைய
செயலாளர் (பொறுப்பு) வி.சோபனா தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.