தமிழகத்தில்,
லோக்சபா தேர்தலில், 5.50 கோடி வாக்காளர்கள், ஓட்டு போட உள்ளனர். தமிழக
வரலாற்றில் முதன் முறையாக, இம்முறை, ஆண் வாக்காளர்களை விட, பெண்
வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். 2009 லோக்சபா தேர்தலை விட, கூடுதலாக 1.34
கோடி பேர், இந்த தேர்தலில், ஓட்டு போட உள்ளனர்.சிறப்பு முகாம் இதுகுறித்து,
தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீன்குமார் கூறியதாவது:
தமிழகத்தில்,
அக்டோபர் மாதம் வாக்காளர் பட்டியல் திருத்தம் பணி நடந்தது. விடுமுறை
நாட்களில், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
இம்முகாமில், வாக்காளர் பட்டியல், பெயர் சேர்க்கை, நீக்கம், திருத்தம்
மற்றும் முகவரி மாற்றம் செய்ய, விண்ணப்பங்கள் பெறப்பட்டன.பெறப்பட்ட, 33
லட்சம் விண்ணப்பங்களில், 27 லட்சம் பேர், வாக்காளர் பட்டியலில்
சேர்க்கப்பட்டனர். இறுதி வாக்காளர் பட்டியல், ஜனவரியில் வெளியிடப்பட்டது.
அதன்பிறகும், ஏராளமானோர் பெயர், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாமல்
இருப்பதாக, குற்றச்சாட்டு எழுந்தது.அதைத்
தொடர்ந்து, மார்ச் 9ம் தேதி, அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், சிறப்பு
முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில், 9.95 லட்சம் பேர், பெயர் சேர்க்க
விண்ணப்பித்தனர்.வாக்காளர் பட்டியல் மார்ச், 25ம் தேதி வரை, பெயர்
சேர்க்க விண்ணப்பங்கள் பெறப்பட்டதில், 13 லட்சம் விண்ணப்பங்கள் வந்தன. அவை
பரிசீலிக்கப்பட்டு, தகுதியானவர்கள் பெயர் சேர்க்கப்பட்டு, துணை வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில், அப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில், பட்டியல் அச்சிடும் பணி நடந்து வருகிறது.
துணை வாக்காளர் பட்டியலையும் சேர்த்து, தமிழகத்தில், 2,75,18,333 ஆண்கள், 2,75,21,570 பெண்கள், 3,349 திருநங்கைகள் என, மொத்தம், 5,50,43,252 வாக்காளர்கள் உள்ளனர்; ஆண் வாக்காளர்களை விட, 3,237 பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.
தமிழக வரலாற்றில், முதன் முறையாக, ஆண் வாக்காளர்களை விட, பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2009 லோக்சபா தேர்தலின் போது, 4.16 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், கூடுதலாக, 1.34 கோடி வாக்காளர்கள், இம்முறை வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று உள்ளனர்.இது தவிர, வெளிநாடுகளில் வசிக்கும், 74 ஆண்கள், 52 பெண்கள், ஒரு திருநங்கை, என, மொத்தம், 127 பேர், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
ராணுவம், கடற்படை, விமானப்படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை, எல்லை பாதுகாப்புப் படை போன்றவற்றில் பணிபுரியும், 53,624 ஆண்கள், 18,362 பெண்கள் என, மொத்தம், 71,986 வாக்காளர்கள், ஓட்டு போட தகுதி பெற்றுள்ளனர். இவர்களையும் சேர்த்தால், தமிழகத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை, 5.51 கோடியாகும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.