ஐந்தாண்டு சட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை
முதல் வாரத்தில் தொடங்கப்படும் என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்
பல்கலைக்கழக துணைவேந்தர் வணங்காமுடி கூறினார்.சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 6
சட்டக் கல்லூரிகளில் ஐந்தாண்டு சட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
பல்கலைக்கழகத்தில் பி.ஏ.,பி.எல். (ஹானர்ஸ்) 120 இடங்களும்,
பி.காம்.,பி.எல். (ஹானர்ஸ்) 60 இடங்களும் உள்ளன. இது தவிர அரசு சட்டக்
கல்லூரிகளில் பி.ஏ.,பி.எல். படிப்புகளில் 1,052 இடங்கள் உள்ளன.
பிளஸ்-2 முடித்த மாணவர்கள் இந்தப் படிப்புகளில் சேரலாம். இந்தப்
படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை பல்கலைக்கழகம் நடத்தி
வருகிறது.
இதற்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை (மே 12) தொடங்கியது.
சென்னையில் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள மையத்தில் துணைவேந்தர்
வணங்காமுடி விண்ணப்ப விநியோகத்தைத் தொடங்கி வைத்தார். பின்னர்
செய்தியாளர்களுக்கு
அவர் அளித்த பேட்டி:
பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் ஐந்தாண்டு ஹானர்ஸ் சட்டப்
படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 6 கடைசித் தேதி. இதற்கான தரவரிசைப்
பட்டியல் ஜூன் 13-ஆம் தேதி வெளியிடப்படும். கலந்தாய்வு ஜூலை முதல்
வாரத்தில் தொடங்கப்படும்.
அரசு சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் ஐந்தாண்டு சட்டப் படிப்புகளுக்கு
விண்ணப்பிக்க ஜூன் 13 கடைசித் தேதியாகும். இதற்கான தரவரிசைப் பட்டியல்
ஜூன் 23-ஆம் தேதி வெளியிடப்படும்.
மூன்றாண்டு படிப்புக்கு...: இதுபோல் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும்
மூன்றாண்டு பி.எல். (ஹானர்ஸ்) படிப்புக்கு மே 26-ஆம் தேதி முதல் விண்ணப்பம்
விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூலை 11
கடைசித் தேதி. ஜூலை 21-இல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.
அரசுக் கல்லூரிகளில் வழங்கப்படும் மூன்றாண்டு பி.எல். படிப்புகளுக்கு மே
26-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்த
விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஆகஸ்ட் 8 கடைசித் தேதியாகும். ஆகஸ்ட் 31-இல்
தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்றார் வணங்காமுடி.