பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 7
நாள்களே உள்ள நிலையில் இதுவரை 1,500 பேர் மட்டுமே பூர்த்தி செய்த
விணணப்பங்களை சமர்ப்பித்திருப்பது தெரியவந்துள்ளது.இதுவரை மொத்தம் 1.82 லட்சம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை
அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. 2014-15 கல்வியாண்டுக்கான கலந்தாய்வு
ஜூன் மூன்றாவது வாரத்தில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்ப விநியோகம் மே 3-ஆம் தேதி தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை
மற்றும் பொது விடுமுறை நாள்களில் விண்ணப்ப விநியோகம் இல்லை. எனவே,
திங்கள்கிழமை வரையிலான 8 நாள்களில் 1 லட்சத்து 82 ஆயிரம் விண்ணப்பங்கள்
விநியோகிக்கப்பட்டுள்ளன.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க மே 20 கடைசித் தேதியாகும்.
திங்கள்கிழமை வரை 1,500 பேர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச்
சமர்ப்பித்துள்ளனர். பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது இனிதான்
அதிகரிக்கும். மே 19, 20 தேதிகளில்தான் அதிக எண்ணிக்கையில் பூர்த்தி செய்த
விண்ணப்பங்கள் வரும் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர்
ரைமண்ட் உத்தரியராஜ் கூறினார்.