கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கட்-ஆஃப்
மதிப்பெண் கடந்த ஆண்டை விட 0.5 அளவுக்கு உயரும் என தமிழ்நாடு கால்நடை
மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பதிவாளரும் துணைவேந்தருமான (பொறுப்பு)
டி.ஜே. ஹரிகிருஷ்ணன் கூறினார்
கால்நடை மருத்துவப் படிப்பு கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகத்தை
சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரி மையத்தில் திங்கள்கிழமை (மே
12) தொடங்கி வைத்த அவர் இந்த தகவலை தெரிவித்தார்.
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:
ஐந்தரை ஆண்டு கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பை (பி.வி.எஸ்சி.)
பொருத்தவரை சென்னை (120 இடங்கள்), நாமக்கல் (80), திருநெல்வேலி (40),
ஒரத்தநாடு (40) ஆகிய பகுதிகளில் உள்ள 4 கல்லூரிகளில் மொத்தம் 280 இடங்கள்
உள்ளன.
இதில் மாற்றுத் திறனாளிகளுக்கு 8 இடங்களும், விளையாட்டுப் பிரிவின் கீழ்
5 (மகளிர் -3, ஆண்கள் -2) இடங்களும், முன்னாள் ராணுவத்தினரின்
வாரிசுகளுக்கு 2 இடங்களும், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு 1
இடமும், பிளஸ்-2 தொழில் பிரிவு படித்த மாணவர்களுக்கு 14 இடங்களும்
ஒதுக்கப்படும்.
மத்திய அரசு ஒதுக்கீட்டுக்கு (இந்திய கால்நடை மருத்துவக் கவுன்சில்) 48 இடங்கள் ஒப்படைக்கபபடும்.
இது தவிர சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டம் கொடுவள்ளியில் உள்ள
கல்லூரியில் நான்கரை ஆண்டு பி.டெக். (எஃப்.டி.-உணவுத் தொழில்நுட்பம்)
படிப்பு (20 இடங்கள்)
உள்ளது. ஒசூரில் உள்ள கல்லூரியில் பி.டெக். (பிபிடி-கோழியின உற்பத்தி தொழில்நுட்பம்) படிப்பு (20 இடங்கள்) உள்ளது.
இந்தப் படிப்புகளில் 2014-15 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்காக இந்த
கலந்தாய்வு நடத்தப்படுகிறது. செப்டம்பர் முதல் வாரம் அல்லது இரண்டாவது
வாரத்தில் கலந்தாய்வு நடத்தப்படும்.
ஜூலையில் தரவரிசைப் பட்டியல்: கால்நடை மருத்துவப் படிப்புக்கான
விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் உள்ள 14 மையங்களில் மே 30-ஆம் தேதி வரை
விநியோகிக்கப்படும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூன் 2-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள்
சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை தபால் மூலமும் பெற்றுக் கொள்ளலாம்.
www.tanuvas.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தைப்
பயன்படுத்தி ஆன்-லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம். தரவரிசைப் பட்டியல் ஜூலை
மாதம் வெளியிடப்படும்.
கட்-ஆஃப் மதிப்பெண் உயரும்: பிளஸ்-2 தேர்வில் இயற்பியல், வேதியியல் ஆகிய
பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண்ணை இந்த ஆண்டு ஏராளமான மாணவர்கள்
பெற்றுள்ளனர். மேலும் வேதியியல், உயிரியல் பாடங்களில் 200-க்கு
199-லிருந்து 197 மதிப்பெண் வரை ஏராளமான மாணவர்கள் பெற்றுள்ளனர்.
இதனால், கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகளில் சேர விரும்பும்
மாணவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் கடந்த ஆண்டை விட 0.5 மதிப்பெண் உயர
வாய்ப்பு உள்ளது.
கடந்த கல்வி ஆண்டில் (2013-14) பொதுப் பிரிவில் (ஓ.சி.) அதிகபட்சம் 199
கட்-ஆஃப் மதிப்பெண் முதல் 197 கட்-ஆஃப் வரை பெற்றவர்களுக்கு பி.வி.எஸ்சி.
படிப்பில் இடம் கிடைத்தது. பிற்படுத்தப்பட்டோர் (பி.சி.) பிரிவில் 199
முதல் 196.75 கட்-ஆஃப் வரை பெற்றவர்களுக்கு இடம் கிடைத்தது. எம்.பி.சி.
பிரிவில் 198.50 முதல் 194.50 கட்-ஆஃப் பெற்றவர்கள் இடங்களைப் பெற்றனர்.
எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவில் 197 முதல் 190 கட்-ஆஃப் மதிப்பெண் வரை
பெற்றவர்களுக்கு இடங்கள் கிடைத்தன. நடப்புக் கல்வி ஆண்டில் (2014-15) இந்த
கட்-ஆஃப் மதிப்பெண் அனைத்துப் பிரிவினருக்கும் 0.5 அதிகரிக்கும் என
மதிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு உறுதி: கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகளை மேற்கொள்பவர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு கிடைப்பது உறுதி.
அரசுத் துறைகளைப் பொருத்தவரை மூன்று ஆண்டுக்கு ஒரு முறை தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு நடத்தி கால்நடை
மருத்துவர் இடங்களை நிரப்புகிறது. இது தவிர பால்பண்ணைகள், கோழியின
உற்பத்தித் துறை உள்ளிட்ட தனியார் துறைகளிலும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன
என்றார் அவர்.