சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவு வெளியாக தாமதமாகும்
என்பதற்காக பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி
நீட்டிக்கப்படாது என அண்ணா பல்கலைக்கழகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.மதிப்பெண் சான்றிதழ் இல்லாவிட்டாலும் இருக்கும் தகவல்களை இணைத்து
மாணவர்கள் பி.இ. கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் பல்கலைக்கழகம்
அறிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பொறியியல் முதலாமாண்டு வகுப்புகளை ஆகஸ்ட்
முதல் நாள் தொடங்கிவிட வேண்டும். இதன்படி, ஜூலை 31-ஆம் தேதிக்குள் பி.இ.
கலந்தாய்வை முடிப்பதற்கான நடவடிக்கைகளை அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொண்டு
வருகிறது.
2014-15 கல்வியாண்டுக்கான பி.இ. கலந்தாய்வு ஜூன் மூன்றாவது வாரத்தில்
தொடங்க உள்ளது. இதற்கான விண்ணப்ப விநியோகம் மே 3-ஆம் தேதி தொடங்கியது.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 20 கடைசித் தேதி என
அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே மூன்றாவது வாரத்தில்தான் வெளியிடப்படும் என தெரியவந்துள்ளது.
மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு காரணமாக சி.பி.எஸ்.இ. பிளஸ்-2
தேர்வுகள் ஏப்ரல் 25-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனால் தேர்வு முடிவுகள்
வெளியாவதும் தள்ளிப் போகிறது.
எனவே, பி.இ. கலந்தாய்வுக்கு சி.பி.எஸ்.இ. மாணவர்கள் விண்ணப்பிப்பதில்
ஏற்படும் சிரமத்தைப் போக்கும் வகையில், விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்க
வேண்டும் என்று பெற்றோர் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தங்களிடம் இருக்கும் தகவல்களை வைத்து விண்ணப்பித்துவிட்டு, பின்னர்
மதிப்பெண் சான்றிதழ் நகலை அனுப்பலாம் என அண்ணா பல்கலைக்கழக
அறிவித்துள்ளபோதும், மதிப்பெண் சான்றிதழ் நகலுக்கான தபால் சென்று சேர்வதில்
தாமதம் ஏற்பட்டால் தேவையற்ற சிரமம் ஏற்படும். எனவே, விண்ணப்பிக்கும்
காலத்தை நீட்டிக்க வேண்டும் என சென்னை முகப்பேரிலுள்ள தனியார் சி.பி.எஸ்.இ.
பள்ளி மாணவர் சந்தோஷ் தெரிவித்தார்.
இது குறித்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியதாவது:
பொறியியல் கலந்தாய்வுக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள்
விண்ணப்பிப்பர். இந்த 2 லட்சம் விண்ணப்பங்களையும் கலந்தாய்வு தொடங்குவதற்கு
முன்னர் பரிசீலனை செய்து, அனுமதிக்கப்பட்ட குறைபாடுகள் எதுவும் இருந்தால்
அதை சம்பந்தப்பட்ட மாணவரிடம் தெரிவித்து நிவர்த்தி செய்யும் பணிகளையும்
முடித்துவிடவேண்டும்.
அது மட்டுமின்றி ஆகஸ்ட் முதல் தேதியில் பொறியியல் முதலாமாண்டு வகுப்பு
தொடங்கிவிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால், ஜூலை 31-ஆம்
தேதிக்குள் கலந்தாய்வை முடித்தாக வேண்டிய கட்டாயமும் உள்ளது.
எனவே, பி.இ. கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிப்பது என்பது இயலாத காரியம்.
தேர்வு முடிவு வெளிவராவிட்டாலும், இருக்கும் ஆவணங்களை இணைத்து
சி.பி.எஸ்.இ. மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அதன் பிறகு, மற்ற ஆவணங்களை
தனியாக அனுப்பலாம்.
மேலும், மாநில பள்ளி கல்வித் துறையிடம் ஒவ்வொரு ஆண்டும் பிளஸ்-2 தேர்வு
முடிவுகள் அடங்கிய குறுந்தகடைப் பெறுவதுபோல், இம்முறை சி.பி.எஸ்.இ.
துறையிடமும் தேர்வு முடிவு குறுந்தகடைப் பெறவுள்ளோம்.
அது மட்டுமின்றி, கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் விவரங்கள்
அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் அவ்வப்போது பதிவேற்றம்
செய்யப்பட்டுவிடும்.
மாணவர்கள் இணையதளத்தில் இந்தப் பகுதிக்குச் சென்று விண்ணப்ப பதிவு எண்ணை
சமர்ப்பித்தால், அவர்களுடைய விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது, என்னென்ன
விவரங்கள் இடம்பெற்றுள்ளன என்பதை சரிபார்த்துக்கொள்ளலாம் என்றார்.