தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை
வேளாண் பட்டப் படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பணி தொடங்கியது.
தமிழகம் முழுவதும் இருந்து திங்கள்கிழமை ஒரே நாளில் 7,075 பேர் ஆன்லைனில்
பதிவு செய்துள்ளதாக மாணவர் சேர்க்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2014-15 கல்வியாண்டில் 13
பட்டப் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பணி,
திங்கள்கிழமை தொடங்கியது. கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்
நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் தங்களது பெற்றோருடன் விண்ணப்பம் பெற
வந்திருந்தனர்.
இந்த ஆண்டில் பட்டப் படிப்பில் சேர ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க
முடியும் என்பதால், பல்கலைக்கழக வளாகத்தில் 10-க்கும் மேற்பட்ட
உதவியாளர்கள் மூலம் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தனர். ஆன்லைன்
விண்ணப்பம் தொடங்கிய முதல் நாளில் 7,075 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில்
2,678 பேர் ஆன்லைனில் பதிவு செய்து, விண்ணப்பங்களை பூர்த்தி செய்து
சமர்ப்பித்துள்ளனர்.
வேளாண் பல்கலைக்கழகத்தின் இளநிலை படிப்புகளில் சேர ஜூன் 7-ஆம் தேதி வரை
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த ஆண்டில் வேளாண் பல்கலைக்கழகத்தில் சேர
மாணவ, மாணவிகளிடையே கடும் போட்டி நிலவும் எனத் தெரிகிறது.
1,820 இடங்களுக்கு கடும் போட்டி: தமிழ்நாடு வேளாண்மைப்
பல்கலைக்கழகத்தில் உறுப்புக் கல்லூரிகளில் 1,040 பேரும், இணைப்புக்
கல்லூரிகளில் 780 பேரும் என மொத்தம் 1,820 பேர் சேர்க்கப்படுகின்றனர்.
இதில் இணைப்புக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்கள் தமிழ்நாடு வேளாண்மைப்
பல்கலைக்கழகத்தாலும், மீதமுள்ள 50 சதவீத இடங்கள் அந்தந்தக் கல்லூரிகளாலும்
நிரப்படுகிறது.
2013-ஆம் ஆண்டில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வில், தமிழ்நாடு வேளாண்மைப்
பல்கலைக்கழகத்தில் சேர ஓ.சி. பிரிவினருக்கு 196.00 கட் ஆஃப் மதிப்பெண்கள்
இருந்தது. அதேபோல பி.சி. பிரிவினருக்கு 189.00-ம், பி.சி.எம்.
பிரிவினருக்கு 193.25-ம், எம்.பி.சி. பிரிவினருக்கு 187.25-ம், எஸ்.சி.
பிரிவினருக்கு 178.50-ம், எஸ்.சி.ஏ. பிரிவினருக்கு 188.25-ம், எஸ்.டி.
பிரிவினருக்கு 188.00 கட் ஆஃப் மதிப்பெண்கள் இருந்தது.
வேளாண் படிப்புகளில் சேர கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 40,000 பேர்
விண்ணப்பித்திருந்தனர். இந்த ஆண்டு யாரும் எதிர்பாராத வகையில் ஆன்லைன்
விண்ணப்பம் தொடங்கிய முதல் நாளே 7,075 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த
எண்ணிக்கை மிகவும் அதிகம். இன்னும் ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 7-ஆம் தேதி
வரை காலக்கெடு உள்ளதால், இந்த ஆண்டில் வேளாண் படிப்புகளுக்கு
விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும் எனத் தெரிகிறது.
அதேபோல 1,820 இடங்களே உள்ளதால், மாணவர்களிடையே கடும் போட்டியும், கட்
ஆஃப் மதிப்பெண்ணும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என பல்கலைக்கழக அதிகாரிகள்
தெரிவித்தனர்.
இந்த ஆண்டில் முதல்கட்ட கலந்தாய்வு ஜூன் 30-ஆம் தேதி தொடங்கி, ஜூலை
9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதேபோல இரண்டாம்கட்ட கலந்தாய்வு ஜூலை 14-ஆம்
தேதி முதல் ஜூலை 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. வகுப்புகள் ஜூலை 25-ஆம்
தேதி தொடங்கும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
அரசாணையை மீறி மாணவர் சேர்க்கை நடத்தும் கல்லூரிகள் பிளஸ் 2 தேர்வு
முடிவு வெளியான சில மணி நேரங்களிலேயே எந்தக் கல்லூரியில் எந்தப் படிப்பை
தெரிவு செய்வது என்பதில் மாணவருக்கு மட்டுமல்ல, பெற்றோரும் நிதானமின்றி
அவசரம் காண்பிக்கின்றனர். ஐ.டி. மோகம் குறைந்த நிலையில், பொறியியல்
படிப்புகளில் சேரும் ஆர்வம் மாணவர்களிடையே குறைந்து வருகிறது.
இதனால் பி.காம். பி.பி.எம். படிப்புகள் மற்றும் அடிப்படை கணித
படிப்புகளில் பி.எஸ்சி. கணிதம், வேதியியல், இயற்பியல் படிப்புகளில் சேர
மாணவர்கள் ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.
தேர்வு முடிவுகள் வெளியானதும், பெற்றோர் தங்களது குழந்தைகளை எந்த
படிப்பில் சேர்ப்பது என்று அவசரம் காட்டுகின்றனர். இந்த அவசர நிலையை
பயன்படுத்திக் கொள்ளும் தனியார் கல்லூரி நிர்வாகங்கள், பணத்தை வாங்கி
மாணவர் சேர்க்கையை நடத்தி முடித்து விடுகின்றனர். மாணவர்களும் ஒருவித
பதபதைப்புடனே படிப்புகளில் சேரும் சூழ்நிலை உள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிந்து 10 நாள்களுக்குப் பிறகே கல்லூரிகள் மாணவர்
சேர்க்கை நடத்திட வேண்டும் என்று தமிழக அரசின் அரசாணை உள்ளது. ஆனால், இந்த
அரசாணையை தனியார் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள், அரசு உதவி பெறும்
கல்லூரிகள் கண்டுகொள்வதில்லை. அதேபோல, பிளஸ் 2 தேர்வு வெளியானவுடனேயே
மாணவர் சேர்க்கை நடத்துகின்றனர்.
கடந்த இரு ஆண்டுகளாக வேளாண் படிப்புகளில் சேர மாணவ, மாணவியர் ஆர்வம்
காண்பிக்கின்றனர். இந்தப் படிப்பை முடித்தவுடன் ஏதாவது ஒரு வங்கியிலோ
அல்லது உர நிறுவனங்கள், விதை நிறுவனங்கள், ஆட்டோ மொபைல் துறைகளில் வேலை
கிடைக்கிறது. வேளாண் ஆராய்ச்சிகளும் விரிவாக நடந்து வருவதால், வேளாண்
படிப்புகளுக்கு நல்ல மவுசு உள்ளது என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.