தொழிற்கல்வி ஆசிரியர்கள் பத்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி
தமிழகம் தழுவிய உண்ணாவிரத போராட்டத்தை வரும் ஆக. 9ல் சென்னையில் நடத்த
முடிவு செய்துள்ளனர்.தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழில்கல்வி ஆசிரியர் சங்கத்தின்
மாநில கூட்டம், சேலத்தில், நேற்று, நடந்தது. மாநில கொள்கை பரப்பு செயலர்
வரதன் தலைமை வகித்தார்.கூட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி பகுதிநேர
ஊழியருக்கும், பணிக்காலத்தில் 50 சதவீதம் கணக்கிட்டு, பென்ஷன் வழங்க, அரசு
நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிற்கல்வி ஆசிரியர்கள், சம்பள நிலுவைத்தொகை
பெற அரசு உத்தரவில் திருத்தம் செய்ய வேண்டும்.
கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக பணியாற்றும் தொகுப்பூதிய
தொழிற்கல்வி ஆசிரியர்கள், 271 பேருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர் காலிபணியிடத்தை
நிரப்ப வேண்டும். தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில், தொழிற்கல்வி
பாடப்பிரிவை துவக்க வேண்டும்.
பணி விதிகள், பதவி உயர்வு, கலந்தாய்வு ஆகியவற்றை அமல்படுத்த
வேண்டும் என்பது போன்ற 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வரும் ஆக.9ல்
தமிழகம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் சென்னையில் நடத்துவது என தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.