பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க
உள்ளதால், ஆசிரியர்கள் விடுப்பு எடுப்பதை தடுக்க தேர்வுத்துறை முடிவு
செய்துள்ளது. விரைவில் இதற்கான சுற்றறிக்கை அனைத்து பள்ளிகளுக்கும்
அனுப்பவும் தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் மார்ச்
மாதம் தொடங்க உள்ளன. முன்னதாக செய்முறைத் தேர்வுகள் தொடங்குவதற்கான அனைத்து
ஏற்பாடுகளையும் தேர்வுத் துறை செய்து வருகிறது. இந்நிலையில், பொது
தேர்வுகளை குழப்பம் இன்றி நடத்துவது குறித்து தேர்வுத் துறை திட்டமிட்டு
வருகிறது. மேலும், பறக்கும் படை அமைத்தல், பாதுகாப்பு ஏற்பாடுகள், மின்சார
வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்பாக ஆய்வுப் பணிகள் நடந்து வருகிறது.
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகளில் இந்த ஆண்டு 100 சதவீதம்
தேர்ச்சி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப அனைத்து மாவட்ட
அதிகாரிகளையும் முடுக்கிவிட்டுள்ளது. மேலும், செய்முறைத் தேர்வுகள் தொடங்க
உள்ள நிலையில் தேர்வு முடிகின்ற வரை கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் இனி
விடுப்பில் செல்ல முடியாது. அவர்கள் வழக்கமான காரணங்களை கூறி விடுமுறை கோர
முடியாது. அப்படி வரும் கோரிக்கைகளை நிராகரிக்கவும் கூறப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வில் தவறுகள், குழப்பங்கள் ஏதாவது நடந்தால் சம்பந்தப்பட்ட கல்வி
அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தேர்வுத் துறை முடிவு
செய்துள்ளது. இதனால், ஆசிரியர்கள் பொதுத் தேர்வு முடியும் வரை விடுப்பில்
செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.