இந்நிலையில், 18 ஆசிரியர் சங்கங்கள் ஒன்று சேர்ந்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டா) என்ற பெயரில் புதிய கூட்டமைப்பு உருவாக்கி உள்ளனர். இதில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம், அனைத்து ஆசிரியர் சங்கம், ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட 18 சங்கங்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த கூட்டமைப்பின் சார்பில் டி.ஆர்.ஜான் வெஸ்லி தலைமையில் நேற்று தலைமை செயலகம் வந்து, முதல்வரின் தனி பிரிவில் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது: 6வது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி மத்திய அரசில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்ற ஊதியம் போல் தமிழக அரசின் கீழ் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு ஒரே அளவிலான வீட்டு வாடகைப்படி வழங்க வேண்டும் என்று மனுவில் கூறி உள்ளனர். தமிழகம் முழுவதும் நாளை, ஜேக்டோ சார்பில் நடத்தப்படும் போராட்டத்தில் நாங்கள் பங்கேற்க மாட்டோம் என்றும் ஜாக்டா நிர்வாகிகள் நிருபர்களிடம் தெரிவித்தனர். ஆளுங்கட்சிக்கு ஆதரவு தெரிவித்து ஜாக்டா அமைப்பினர் போராட்டத்தில் பங்கேற்க விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.








