மாணவ-மாணவிகளுக்கு கல்வியில் ஆர்வத்தை வளர்க்க ‘தினத்தந்தி’ ஆண்டுதோறும் மாணவர் பரிசு திட்டத்தை நடத்தி வருகிறது.
அதன்படி எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளில் மாநிலத்தில் முதல் இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசும், தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான பரிசளிப்பு விழா, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நேற்று மாலை நடந்தது. சி.பா.ஆதித்தனார் நூற்றாண்டு கலையரங்கத்தில் நடந்த இந்த விழா, கல்லூரி பொன்விழாவுடன் இணைந்து இருபெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.
சிறப்பு விருந்தினராக ஆச்சி நிறுவனக் குழுமங்களின் நிறுவனரும், தலைவருமான ஆ.தே.பத்மசிங் ஐசக் பங்கேற்றார்.
21 பேருக்கு பரிசுகள்
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 20 மாணவ-மாணவிகள் தமிழ்நாட்டில் முதல் இடம் பிடித்தனர். பிளஸ்-2 தேர்வில் தமிழை ஒரு பாடமாக எடுத்து படித்த எஸ்.சுஷாந்தி என்ற மாணவி மாநிலத்தில் முதல் இடம் பிடித்தார்.
எஸ்.எஸ்.எல்.சி.யில் தர்மபுரி ஆர்.அக்ஷயா, பத்தமடை டி.என்.பரா பானு, தர்மபுரி ஏ.தீப்தி, ஆர்.ஏ.தீப்தி, கிருஷ்ணகிரி எஸ்.காவ்யா, தர்மபுரி ஆர்.கயல்விழி, வடக்கநேந்தல், கள்ளக்குறிச்சி என்.கீர்த்திகா, தர்மபுரி ஜி.கிருத்திகா, பி.மைவிழி, பி.ரேவதி அபர்ணா, மதுரை ஏ.சஞ்சனா, தர்மபுரி எஸ்.இ.சந்தியா, தண்டுபத்து, திருச்செந்தூர் பி.எஸ்.சந்தியா, சாத்தூர் எம்.ஷரோன் கரீஷ்மா, விருதுநகர் ஆர்.ஸ்ரீரத்தினமணி, தென்காசி எம்.சுப்ரிதா, தாராபுரம் எஸ்.வர்ஷினி, தர்மபுரி ஆர்.ஸ்ரீவந்தனா, தஞ்சாவூர் எம்.மகேஷ் லகிரு, அரக்கோணம் கே.எச்.ஜெஸ்வந்த் ஆகியோர் முதல் இடம் பெற்று இருந்தனர்.
இந்த 21 மாணவ-மாணவிகளுக்கும் ‘தினத்தந்தி’ பரிசாக தலா ரூ.10 ஆயிரமும், தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது.
தமிழில் சாதனை
எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் பாடத்தில் மாநிலத்திலேயே முதல் மார்க் எடுத்த பி.எஸ்.சந்தியா, கே.எச்.ஜெஸ்வந்த் ஆகியோருக்கு தலா ரூ.5 ஆயிரம் பரிசும், தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது.
வாழ்த்துரை
விழாவில் சிறப்பு விருந்தினர் பத்மசிங் ஐசக், மாணவ-மாணவிகளை வாழ்த்தி பேசும் போது,“திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் முன்னாள் மாணவனான நான், கல்லூரி பொன்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தினத்தந்தி பரிசு பெறும் மாணவர்களை வாழ்த்துவதை பெருமையாக கருதுகிறேன். ஒவ்வொரு துறையிலும் நாடு முன்னேற்றம் அடைந்தால்தான், இந்தியா வலிமை வாய்ந்த நாடாக மாற முடியும். அதற்கான பொறுப்புகள் மாணவர்களுக்கு உண்டு. நீங்கள் எந்த தொழிலை தொடங்குவதாக இருந்தாலும் அல்லது பணிக்கு செல்வதாக இருந்தாலும் சரியாக திட்டமிட்டு, நன்றாக சிந்தித்து தொடங்குங்கள். கடினமாக உழையுங்கள். அடுத்த 5 ஆண்டுகளில் நிச்சயம் பெரிய அளவில் எல்லோராலும் சாதிக்க முடியும்” என மாணவர்களுக்கு நம்பிக்கை தரும்படி பேசினார்.
கல்லூரி மாணவ-மாணவிகள் நடனம், நாட்டியம், நாடகம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.








