பிளஸ்-2 தேர்வு தொடங்கியது
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நேற்று பிளஸ்-2 தேர்வு தமிழ் முதல் தாளுடன் தொடங்கியது. 6 ஆயிரத்து 256 பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 90 ஆயிரத்து 753 மாணவர்களும், 4 லட்சத்து 52 ஆயிரத்து 311 மாணவிகள் உள்பட 8 லட்சத்து 43 ஆயிரத்து 64 பேர்கள் தேர்வு எழுதினார்கள். இவர்கள் தவிர 42 ஆயிரத்து 963 பேர் தனித்தேர்வர்கள்.
சென்னையில் 412 பள்ளிகளைச்சேர்ந்த மாணவ-மாணவிகள் 144 மையங்களில் 24 ஆயிரத்து 653 மாணவர்களும், 28 ஆயிரத்து 750 மாணவிகளும் தேர்வை எழுதினார்கள்.
தமிழ் வழியில்
புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வுகளை 128 பள்ளிகளைச் சேர்ந்த 6 ஆயிரத்து 575 மாணவர்களும், 7 ஆயிரத்து 731 மாணவிகளும் 33 மையங்களில் எழுதினர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சேர்த்து மொத்தமாக தமிழ் வழியில் பிளஸ்-2 தேர்வில் 5 லட்சத்து 56 ஆயிரத்து 498 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
முதல் நாள் தேர்வு என்பதால் நேற்று மாணவ-மாணவிகள் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, கடவுளை வணங்கிவிட்டு, பெற்றோரிடம் வாழ்த்து பெற்று பள்ளிகளுக்கு தேர்வு எழுதச்சென்றனர். சிலர் பிள்ளையார் கோவில் அல்லது அம்மன் கோவிலில் தேர்வு நன்றாக எழுதவேண்டி வழிபாடு செய்தனர். சிலர் மாதாசிலை முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி வணங்கினார்கள்.
மாணவர்கள் நன்றாக தேர்வு எழுத கடவுளை வேண்டி பெரும்பாலான பள்ளிகளில் தலைமை ஆசிரியர் தலைமையில் பிரார்த்தனை நடைபெற்றது. சிலமாணவர்கள் தங்களது ஆசிரியர்களின் கால்களில் விழுந்து ஆசி பெற்றனர்.
ஷூ, காலணிகள் அணிந்து செல்லத்தடை
தேர்வு அறைக்கு பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல் ஆகியவை மட்டுமே மாணவர்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர். சில பள்ளிகளில் பேனா பென்சிலை போட்டு எடுத்துச்செல்வதற்கு வசதியாக பளிச் என்று தெரியும் வகையில் பவுச் அனுமதிக்கப்பட்டது.
ஊட்டி கொடைக்கானல் போன்ற குளிர் அதிகமாக இருக்கும் மாவட்டங்களில் மட்டுமே மாணவர்கள் ஷூ அணிந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். மற்றபடி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அனைத்து மாவட்ட மாணவ-மாணவிகளும் தேர்வு மையத்திற்கு உள்ளே செல்லும்போது காலணிகளை கழற்றி விட்டுதான் உள்ளே சென்றனர். மாணவர்கள் பெல்ட் அணிந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டது. காலணி மற்றும் பெல்ட் அணிந்து சென்றால் அவற்றின் உள்ளே வைத்து துண்டு பேப்பர் கொண்டு சென்றுவிட வாய்ப்பு உள்ளது என்று கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தேர்வுத்துறை அதிகாரி தெரிவித்தார்.
பிளஸ்-2 பொதுத் தேர்வினைப் பொறுத்தவரை பள்ளி மாணவ, மாணவிகளில், கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு கூடுதலாக 16,947 மாணவ, மாணவிகள் எழுதினார்கள்.
உடல் ஊனமுற்றோர்கள்
பிளஸ்-2 தேர்வை டிஸ்லெக்சியா, கண்பார்வையற்றோர், காதுகேளாதோர், வாய் பேசாதோர் மற்றும் இதர உடல் ஊனமுற்றோருக்கான சொல்வதை எழுதுபவர், கூடுதல் ஒரு மணிநேரம் போன்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு தேர்வு மையங்களின் தரைத்தளத்தில் எழுதும் வகையில் தனி அறைகள் ஒதுக்கப்பட்டு இருந்தது.
அமைச்சர்- முதன்மை செயலாளர்
மாணவ-மாணவிகள் தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்கவும், கண்காணிக்கவும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருந்தது. அவர்கள் தேர்வு மையங்களுக்கு சென்று மாணவர்கள் காப்பி அடிக்கிறார்களா என்று ஆய்வு செய்தனர்.
சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா, அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் ஆகியோர் சைதாப்பேட்டையில் உள்ள ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள வனவாணி பள்ளி ஆகியவற்றிற்கு சென்று மாணவர்கள் தேர்வு எழுதுவதை பார்வையிட்டனர். அப்போது அவர்களுடன் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனிதா உடன் இருந்தார்.
கலெக்டர் சுந்தரவல்லி, சென்னை வேப்பேரியில் உள்ள பென்டிங் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திடீர் என்று சென்று ஆய்வு செய்தார்.
அதிகாரிகள்
அதேபோல பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்கள் க.அறிவொளி, ரெ.இளங்கோவன், ச.கண்ணப்பன், வி.சி.ராமேஸ்வர முருகன், பிச்சை மற்றும் இணை இயக்குனர்கள் தர்ம ராஜேந்திரன், பழனிச்சாமி, கருப்பசாமி, கார்மேகம், உஷாராணி, உமா, நரேஷ், பாலமுருகன், அமிர்தவல்லி உள்ளிட்ட அனைத்து இணை இயக்குனர்களும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளிக்கூடங்களுக்கு சென்று தேர்வு எழுதும் மாணவர்களை கண்காணித்தனர்.
அம்மை நோய் தாக்கப்பட்ட மாணவர்கள், மாணவிகள் தேர்வு எழுத வசதியாகவும் அதே நேரத்தில் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கவும் அவர்களுக்கு தனி அறைகள் ஒதுக்கப்பட்டு இருந்தன.
ராயப்பேட்டை தவான் மேல்நிலைப்பள்ளியில் லிட்டில் பிளவர் பள்ளியைச்சேர்ந்த பார்வையற்ற மாணவர்கள், காது கேளாத மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். பார்வையற்ற மாணவர்களுக்கு ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட மாணவர்கள் சொல்ல சொல்ல விடை எழுதினார்கள்.
விபத்தில் சிக்கிய மாணவர்
செயிண்ட் ஜான்ஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆகாசுக்கு கடந்த ஒருவாரத்திற்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் வலது கை எலும்புமுறிந்துவிட்டது. அதனால் அவருக்கு எழுதமுடியாது. அதனால் அவர் சொல்லச்சொல்ல ஆசிரியர் தேர்வு எழுதினார்.
நேற்று நடந்த தமிழ் முதல் தாள் தேர்வில் சென்னையில் 2 தனித்தேர்வர்களும், மதுரையில் ஒரு தனித்தேர்வரும் காப்பி அடித்ததாக பிடிபட்டனர்.
பிளஸ்-2 தேர்வு 31-ந்தேதி வரை நடக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு 19-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 10-ந்தேதி முடிவடைகிறது.
தேர்வு எளிதாக இருந்தது
பிளஸ்-2 தமிழ் முதல் தாள் தேர்வு முடிந்து மாணவ-மாணவிகள் நேற்று தேர்வு மையத்தை விட்டு வெளியே வந்தனர். அப்போது அவர்கள் மகிழ்ச்சியுடன் வந்தனர்.








