எண்ணும் எழுத்தும் இரு கண்கள்
பின்னர் கருத்தரங்கில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வெ.ராமசுப்ரமணியன் பேசியதாவது:-
பல கல்லூரிகளில் தமிழ்த்துறை செயலற்ற நிலையில் கிடக்கிறது. ஆனால் தமிழை கணிதத்துடன் இணைத்து இதுபோன்ற கருத்தரங்கங்கள் நடத்தப்படுவது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. கல்லூரி பருவத்தில் கருத்தரங்கமும், கணிதமும் முக்கியமானது. தமிழர்களுக்கு எண்ணும், எழுத்தும் இரு கண்கள் போன்றது. எண்ணின் முக்கியத்துவத்தை உணர்ந்துதான் பண்டைய காலத்திலேயே பல கணக்குகளை பாடல் வழியாக அறிமுகப்படுத்தினர்.
ஏனெனில் பாடல்கள் நினைவாற்றலை அதிகரிக்கும். நம்மிடையே காணப்படும் முக்கியமான நோய் ‘மறதி’யே ஆகும். ஆனால் அதற்கு மருந்து நம்மிடையே உள்ளது. ‘மறதி’ எனும் நோயை கணிதத்தால் மட்டுமே மறக்கடிக்க முடியும். எனக்கு தெரிந்து நினைவிழந்த பல முதியவர்கள் ‘சுடோகு’ எனும் எண் விளையாட்டினை தொடர்ந்து விளையாடி தங்களது நினைவுகளை மீட்டுள்ளனர். நினைவாற்றலை திரும்ப கொடுக்கும் வல்லமை தமிழுக்கு உண்டு.
எண்ணிலடங்கா தகவல்கள்
சின்ன சின்ன கணிதங்களை கூட பாடல்கள் வழியாக நமது முன்னோர்கள் நமக்கு தந்திருக்கிறார்கள். பலாப்பழத்தை அறுக்காமலேயே உள்ளே உள்ள பலாச்சுழை எத்தனை உள்ளது? பூசணிக்காயை உடைக்காமலேயே உள்ளே இருக்கும் விதைகள் எத்தனை? என்ற கணக்கு தமிழ் பாடலில் உள்ளது. லட்சம், கோடி, மில்லியன், பில்லியன் தான் நமக்கு தெரியும். ஆனால் அதைத்தாண்டியும் அற்பதம்(10 கோடி), நிகற்பதம்(1 பில்லியன்), கும்பம்(10 பில்லியன்), கணம் (100 பில்லியன்), கற்பம் (1 ட்ரில்லியன்), நிகற்பம் (10 ட்ரில்லியன்), பதமம் (100 ட்ரில்லியன்), சங்கம் (1 ஜில்லியன்), பெற்றம் (10 ஜில்லியம்), அந்நியம் (100 ஜில்லியன்) போன்ற மதிப்புகள் தமிழில் குறிப்பிடப்பட்டுள்ளன.
‘நாதிரை’, ‘ஓலை’, ‘ஜாமம்’, ‘கிழமை’ போன்ற கால நேரங்களையும், ‘குண்டுமணி’, ‘தோழா’, ‘வீசை’, ‘பலன்’, ‘மணங்கு’, ‘வாரம்’ போன்ற எடை அளவுகளையும், பாகப்பிரிவினை எப்படி நடக்கிறது? என்ற எண்ணிலடங்கா கணிதம் தொடர்பான தகவல்கள் தமிழில் சொல்லப்பட்டுள்ளன.
நல்ல உறவு
அதனால்தான் கணிதத்துக்கும், தமிழுக்கும் நல்ல உறவு இருக்கிறது என்று கூறுகின்றனர். பிழைப்புக்காக மற்ற படிப்புகளை படிக்கும் போதே, நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்த செல்வத்தையும் (கணிதம் தொடர்பான தகவல்கள்) அறிந்து தெரிந்து ஆர்வத்துடன் கற்றுக்கொள்ள வேண்டும். நமக்கு, நமது முன்னோர்கள் விட்டுச்சென்ற சொத்துகளை, செல்வங்களை ஆராய்ந்து வெளியே கொண்டு வர வேண்டும். இதில் உங்களை போன்ற இளையதலைமுறையினரின் பங்களிப்பும் பெரிதாக இருக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி வெ.ராமசுப்ரமணியன் பேசினார். முன்னதாக கருத்தரங்கில் ராணி மேரி கல்லூரி கணிதத்துறை தலைவர் வ.சுசீலா வரவேற்று பேசினார். ஒருங்கிணைப்பாளர் ரா.ஸ்டெல்லா மரகதம் நன்றியுரை ஆற்றினார்.








