மதுரை சூர்யாநகரை சேர்ந்தவர் அப்துல் கரீம். சித்தா டாக்டர். இவரது மனைவி சமீமா. இவர்களின் ஒரே மகள் அனிஷ் பாத்திமா. இவர் நேபாளம் பாங்கோ மாவட்டத்திலுள்ள நேபாள் கன்ஞ்ச் மெடிக்கல் கல்லூரியில் 2ம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., படிக்கிறார்.நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது இவர் உட்பட 300 மாணவர்கள் மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கியிருந்தனர். கட்டடத்தில் அதிர்வு ஏற்பட்ட பின் அனைவரும் உயிர் பயத்தில் அலறி அடித்துக் வெளியேறினேர்.இச்சம்பவம் குறித்து மதுரையிலுள்ள பெற்றோரிடம் அனிஷ் பாத்திமாவால் உடனடியாக தகவல் தெரிவிக்க முடியாததால், மறுநாள் 'வாட்ஸ்அப்' மூலம் தகவல் தெரிவித்து தன்னை மீட்குமாறு கூறியுள்ளார்.
மிகவும் அச்சத்தில் உள்ள அவரை அங்கிருந்து அழைத்துவருவது குறித்து பேசும் போது கல்லூரி நிர்வாகம் அனுப்ப முடியாது என முதலில் தெரிவித்தது. எங்களுக்கு ஒரே பெண் தான் என கெஞ்சி கேட்டவுடன் அனுமதி அளித்தது. அதன் பின் தான் விமான டிக்கெட்டிற்கு ஏற்பாடு செய்தோம். இன்று இரவு 8 மணிக்குள் மதுரை வருவார் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.
ஒரே நாளில் 20 முறை நில அதிர்வு -'வாட்ஸ்அப்' மூலம் தினமலர் நாளிதழுக்கு பேசிய மதுரை மாணவிகள் : 'ஒரே நாளில் 20 முறை நிலஅதிர்வை உணர்ந்தோம்" என நேபாளத்தில் இரண்டாம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., படிக்கும் மாணவிகள் அனிஷ் பாத்திமா, அனுஸ்ரீ ஆகியோர் 'வாட்ஸ்அப்' மூலம் தினமலர் நாளிதழுக்கு சிறப்பு பேட்டி அளித்தனர்.
அங்குள்ள நிலைமை குறித்து அவர்கள் கூறியதாவது:தற்போது வரை பாதுகாப்பாக உள்ளோம். முதல் நாளில் காலை 11 மணியளவில் கல்லூரி விடுதியில் இரண்டாம் தளத்தில் தங்கியிருந்தோம். பல்வேறு நாடுகளை சேர்ந்த 300 மாணவர்கள் தங்கியுள்ளோம். நாங்கள் நின்று கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட முதல் அதிர்வால் நிலை தடுமாறினோம். அப்போது எங்கள் அறையில் கட்டிலில் அமர்ந்திருந்த மாணவி ஒருவர் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். இதன் பின் தான் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்றே எங்களால் உணர முடிந்தது.விடுதியில் உள்ள மாணவ மாணவியர் அனைவரும் உயிர் பயத்தில் கூச்சலிட்டு ஒட்டுமொத்தமாக சில நிமிடங்களில் அறைகளை விட்டு வெளியேறி வெளி மைதானத்திற்கு வந்தோம். மதியம் ஒரு மணி வரை 20 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்தோம். ரோடுகள், தரைப் பகுதிகள் என பார்க்கும் இடங்களிலெல்லாம் பள்ளங்கள் ஏற்பட்டன. கண் முன் எதிரே உள்ள கட்டடங்கள் அப்படியே இடிந்து தரைமட்டமாகின. தொடர்ந்து அதிர்வு இருந்து கொண்டே உள்ளது. (சிக்னல் இல்லாததால் தொடர்பு 'கட்' ஆனது.. இதன் பின்) இதனால் இரண்டு நாட்களாக திறந்த வெளியில் தான் தங்கியுள்ளோம். 15 நாட்களுக்கு நில அதிர்வு இருக்கும் என கூறுகின்றனர். இதனால் உயிர் பயத்தில் உள்ளோம். இறைவன் அருளால் தான் நாங்கள் உயிர் பிழைத்தோம். கல்லூரி நிர்வாகம் எங்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறது. விரைவில் தமிழகம் திரும்ப விரும்புகிறோம். எங்கள் பெற்றோர் முயற்சி செய்கின்றனர். அரசும் இதில் முழு வீச்சில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.








