தொலைநிலைக் கல்வியாக அல்லாமல் பிற
பல்கலைக்கழகங்களில் வழங்கப்படுவதுபோல நேரடி (ரெகுலர்) முதுநிலைப் பட்டப்
படிப்பை வழங்க தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் திட்டமிட்டு வருகிறது.
பல்கலைக்கழகம் அமைந்துள்ள சென்னை மையத்தில் மட்டும் இந்த நேரடிப் படிப்பு கொண்டுவரப்பட உள்ளது.
இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரகாந்தா ஜெயபாலன் "தினமணி'க்கு அளித்த பேட்டி:
திறந்தநிலை முறையில் பெறும் பட்டங்களுக்கு மதிப்பு
இல்லை என்ற தவறான எண்ணம் பலருக்கு இருந்து வருகிறது. திறந்தநிலை
படிப்புகளுக்கும் நேரடி வழியில் பெறும் பட்டத்துக்கு இணையான மதிப்பு
உள்ளது. ஆனால் இது பலருக்குத் தெரிவதில்லை.
இதுபோன்ற எண்ணம் உள்ளவர்களுக்காகவும், தேவை அதிகம்
உள்ளதைக் கருத்தில் கொண்டும் நேரடி (ரெகுலர்) படிப்புகளை பல்கலைக்கழகத்தின்
சென்னை மையத்தில் மட்டும் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளோம்.
முதுநிலை பட்டப் படிப்புகளை மட்டும் இந்த முறையில்
வழங்கலாம் என ஆலோசித்து வருகிறோம். குறிப்பாக எம்.பி.ஏ. மனிதவள மேம்பாடு,
சந்தையியல் உள்ளிட்ட படிப்புகளை நேரடி முறையில் கொண்டுவந்தால் பலரும்
பயன்பெற முடியும். எந்த வயதைச் சேர்ந்தவர்களும் சேர முடியும். இதற்கு
முதலில் ஒப்புதல் பெறுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்
பிறகு பாடத்திட்டம் உள்ளிட்ட பிற விஷயங்கள் முடிவு செய்யப்படும்.
இந்த நடைமுறையை அறிமுகம் செய்வதால், தொலைநிலை வழியில்
வழங்கப்படும் படிப்புகளுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது. அதில்
வழங்கப்படும் படிப்புகள் அனைத்தும் வழக்கம்போல தொடரும் என்றார் அவர்.