ஆபத்தில் உதவ ஆம்புலன்சு
விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுகிறவர்கள், நோயினால் திடீரென்று பாதிக்கப்படுகிறவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிப்பதற்கு ஆம்புலன்சு சேவை உதவிகரமாக இருக்கிறது. சில நேரங்களில் நகர போக்குவரத்து நெரிசலில் நோயாளிகளுடன் ஆம்புலன்சுகள் மருத்துவமனைக்கு செல்வதற்கு தாமதமாகி அதுவே உயிரிழப்புக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. சில இடங்களில் ஆம்புலன்சு வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு சாலை வசதிகள் இல்லாமல் இருக்கிறது.
அப்போது அவர் கூறியதாவது:-
மோட்டார் சைக்கிள் ஆம்புலன்சு சேவை
‘‘ஆசியாவிலேயே முதல் முறையாக கர்நாடகத்தில் மோட்டார் சைக்கிள் ஆம்புலன்சு சேவையை முதல்-மந்திரி சித்தராமையா நாளை (அதாவது இன்று) தொடங்கி வைக்கிறார். பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் உள்ளது. இந்த சூழ்நிலையில் ஆம்புலன்சு வாகனங்கள் விபத்து நடக்கும் பகுதிக்கு விரைவாக செல்ல முடிவது இல்லை. அதனால் விபத்தில் சிக்கி படுகாயம் அடைபவர்கள் குறித்த நேரத்தில் முதலுதவி சிகிச்சை கிடைக்காமல் மரணம் அடைகிறார்கள்.
இதுபோன்ற மரணங்களை தடுக்கும் வகையில் விபத்து நடந்த உடனேயே விரைவாக சென்று காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கத்தில் இந்த மோட்டார் சைக்கிள் ஆம்புலன்சு சேவையை நாங்கள் தொடங்குகிறோம். முதல் கட்டமாக 30 மோட்டார் சைக்கிள் வாகனங்களை அறிமுகம் செய்கிறோம்.
சோதனை அடிப்படையில்...
அதில் பெங்களுருவில் மட்டும் 21 வாகனங்கள் இயங்கும். உப்பள்ளி-தார்வார், பெலகாவி, மைசூரு, கலபுரகி, சிவமொக்கா, தாவணகெரே, துமகூரு, விஜியாப்புரா ஆகிய நகரங்களுக்கு தலா ஒரு வாகனம் வழங்கப்படுகிறது. சோதனை அடிப்படையில் இந்த திட்டத்தை அமல்படுத்துகிறோம். இந்த திட்டத்துக்கு கிடைக்கும் வரவேற்பு மற்றும் சாதக-பாதகங்களை பார்த்துக்கொண்டு இதை விரிவுபடுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும்.
இந்த மோட்டார் சைக்கிளில் முதலுதவிக்கு தேவைப்படும் ஆக்சிஜன் உள்பட 40 வகையான மருந்துகள் வைக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் அதிக விபத்துகள் நடைபெறும் பகுதிகளில் இந்த வாகனங்கள் நிறுத்தப்படும். 108 எண்ணுக்கு போன் செய்தால் உடனடியாக இந்த வாகனம் விபத்து நடந்த இடத்துக்கு அனுப்பி வைக்கப்படும். சம்பவத்தின் அடிப்படையில் அத்துடன் ஒரு 4 சக்கர ஆம்புலன்சும் அனுப்பி வைக்கப்படும்.
ரூ.70 லட்சம் செலவு
நான்கு சக்கர ஆம்புலன்சு வாகனங்களைவிட மோட்டார் சைக்கிள் ஆம்புலன்சு வாகனங்கள் சம்பவ இடத்தை விரைவாக சென்றடைய முடியும். மோட்டார் சைக்கிளை ஓட்டுபவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க தேவையான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. ஒரு மோட்டார் சைக்கிளின் விலை சுமார் ரூ.2 லட்சம் ஆகும். 30 வாகனங்களுக்கு ரூ.70 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டர் ஆம்புலன்சு சேவையை தொடங்குவது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இதுபற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. இந்த திட்டத்தை செயல்படுத்த சில ஹெலிகாப்டர் நிறுவனங்கள் முன் வந்துள்ளன.’’
இவ்வாறு மந்திரி யு.டி.காதர் கூறினார்.








